சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கு: போலீஸ் நிலையத்தில் நடந்த சித்ரவதையால் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்!

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மதுரை கோர்ட்டில் 9 போலீசார் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், போலீஸ் நிலையத்தில் நடந்த சித்ரவதையால் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை போலீசார் தாக்கி உள்ளனர். பின்னர் படுகாயங்களுடன் அவர்களை கைது செய்து, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.

அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்ட பென்னிக்ஸ், கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதியும், மறுநாள் அவருடைய தந்தை ஜெயராஜூம் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 2 பேரின் சாவுக்கும் போலீசார்தான் காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சாத்தான்குளம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கு சி.பி.ஐ. எடுத்துக்கொள்ள தாமதம் ஆனதால் அதுவரை சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கை ஒப்படைத்து மதுரை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவிட்டது. அவர்கள் உடனடியாக விசாரித்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

சில நாட்களில் அவர்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் கூட்டுச்சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, போலீஸ்காரர்கள் தாமஸ்பிரான்சிஸ், முருகன், முத்துராஜ் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். மீதம் உள்ள 9 போலீசாரும் மதுரை சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர்.

இதுகுறித்து சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்த நிலையில், ஜூன் 22-ந் தேதி பென்னிக்சும், 23-ந் தேதி ஜெயராஜூம் இறந்துவிட்டனர்.

இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையின்படியும், மத்திய அரசின் அறிவிப்பின்படியும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்றது. முன்னதாக இவர்கள் இருவரும் இறந்தது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் குற்ற வழக்கு எண்-649, 650 என பதிவு செய்து இருந்தனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் இறந்தது தொடர்பாக சி.பி.ஐ. தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த 2 வழக்குகளிலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120-பி, 302, 342, 201, 182, 193, 211, 218, 34 ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. கொரோனா ஊரடங்கு சமயத்திலும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. சிறப்பு போலீசார் விசாரித்து உள்ளனர்.

பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை முடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, தந்தை-மகன் இருவரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் 19.6.2020 அன்று இரவு நேரத்தில் சித்ரவதை செய்யப்பட்டதும், அதனால் அவர்கள் இருவரும் படுகாயங்களுக்கு ஆளாகி, ஜூன் 22, 23-ந் தேதிகளில் அடுத்தடுத்து இறந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த வழக்கில் மற்றவர்களின் பங்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தற்போது இந்த 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே மேற்கண்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடந்து உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here