யாழில் கதவடைப்புக்கு எதிராக தமிழ் தெரியாதவர்கள் நாளை போராட்டம்: மண்டையிலுள்ள கொண்டையை மறைக்காமல் ஏற்பாடு!

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை மறுநாள் (28) வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து பிரதேச வர்த்தக சமூகங்களும் முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதால், நாளை மறுநாள் வடக்கு கிழக்கு முழுமையாக முடங்கும்.

அன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் இயங்காது என தெரிய வருகிறது. மக்கள் தமது எதிர்ப்பை ஜனநாயக முறைப்படி, நாளை மறுநாள் தெரிவிக்கவுள்ளதால், அனைத்து செயற்பாடும் முடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களின் பாணியில், நாளை காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அல்லது நகரில் பிறிதொரு இடத்தில் “போராட்டம்“ என்ற பெயரில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படவுள்ளது.

இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கு எதிராக, கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் தெரிந்த பாதுகாப்பு தரப்பினரே, தமிழ் பிழைகளுடன் பதாகைகள் தயாரித்து சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளை மறுநாள் நடக்கும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு எதிராக, நாளை போராட்டம் என்ற பெயரில் சிலரை நகரில் இறக்கி விட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சில பாதுகாப்புதுறை தொடர்புடைய வட்டாரங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று, மாலை யாழ்ப்பாண நகரிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பேசி, நாளைய குழப்ப முயற்சிக்கு 20 பேரையாவது தருமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், முச்சக்கர வண்டி சாரதிகள் இதை மறுத்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, உள்ளூர்களில் உள்ள சில வேலையற்றவர்களை இணைத்து, அரைகுறையாக தமிழ் தெரிந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலை இலக்காக வைத்தே திலீபனையும், போராட்டத்தையும் கையிலெடுத்துள்ளதென, முச்சக்கர வண்டி சாரதிகளை மூளைச்சலவை செய்ய முயன்றபோதும், அவர்கள் அதை மறுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, தமிழ் ஒட்டுக்குழுவின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here