தமிழ் மக்களை அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: முதல்வர் சரவணபவன்!

மத அனுஷ்டானங்களை பின்பற்றி இறந்தவர்களுக்கு வளிபாடு செய்வதற்கான உரிமையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் மறுக்கப்பட்டு, தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கும் வழிமுறைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தீலிபனின் நினைவேந்தல் தொடர்பாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட தடையுத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் தமிழ் மக்கள் மீது பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுள்ள ஜனநாயக மீறல்கள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தணிந்து இருந்தது. அக்காலத்தில் ஜனநாயக ரீதியான சகல செயற்பாடுகளையும் எங்களால் மேற்கொள்ள முடிந்திருந்தது. எனினும் இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக எங்களுக்காக உண்ண நோம்பிருந்து உயிர் நீத்தவருக்காக அவரது நினைவு நாளில் ஆத்ம சாந்தி வேண்டி பூஜை செய்வதற்கும், விளக்கேற்றி உண்ணா நோம்பு இருப்பதற்கும் எடுத்த முயற்சிக்கு காத்தான்குடி போலீசாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக எனக்கும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், ஜானநாயக போராளிகள் கட்சியின் நகுலேஷ் அவர்களுக்கும் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது .

ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதால் ஜனநாயகம் மீறப்பட போவதில்லை, விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்பட போவதில்லை, கொறோனா பரவுவதற்கான சாத்தியங்களும் இல்லை. இருந்தும் ஏன் தமிழ் மக்களின் மீது இத்தனை அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

ஜனநாயக முறையில் மிக அமைதியாக அடையாள உண்ணாவிரதம் இருப்பதற்கான முயற்சியும், எமது மத அனுஷ்டானங்களை பின்பற்றி இறந்தவர்களுக்கு வளிபாடு செய்வதற்கான உரிமையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனில் தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கும் வழிமுறையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

இத்தகைய அடக்கு முறையான செயற்பாடுகளை தடுப்பதற்கும், ஜனநாயக நீதியில் எங்களது செயற்படுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் சர்வதேச ரீதியாக அழுத்தங்களைக் கொடுத்து எங்களது மக்களின் விடிவிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here