எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்!

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 4 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.

கொரோனா தொற்று நீங்கினாலும், நுரையீரல் தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தது. மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவால் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது.

இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்பிபியின் நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால், முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மேலும், பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த, எஸ்பிபியின் நுங்கம்பாக்கம் வீட்டில் கூடினார்கள்.

நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையிலிருந்து எஸ்பிபியின் உடல் அவருடைய வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இரவு 9 மணியளவில் அவருடைய உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது எஸ்பிபி உடல் எடுத்துச் செல்லப்பட்ட வண்டியைப் பின்தொடர்ந்து பலரும் வாகனங்களில் பின்தொடர்ந்தனர். சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பண்ணை வீட்டில் முக்கியப் பிரபலங்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகரிப்பால் பொதுமக்கள் சிலரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார்கள்.

எஸ்பிபி எனும் மகத்தான கலைஞனுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று முதல்வர் பழனிசாமி அரசு மரியாதை அளிக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் அடக்கம் காவல்துறை மரியாதையுடன் இன்று நடந்தது.

அவரது உடலுக்கு உறவினர்கள் மதச்சடங்கு செய்த பின்னர் காவல்துறை அணிவகுத்து துப்பாக்கியைத் தாழ்த்தி மரியாதை செய்தது. பின்னர் அவரது உடல் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட இடத்திலிருந்து உறவினர்கள் சுமந்து செல்ல, காவல்துறை அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்யும் இடம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

எஸ்பிபியின் உடல் அடக்கம் நடக்கும் இடத்தில் உறவினர்கள், ஏராளமான ரசிகர்கள், ஊடகத்தினர், போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் விஜய், எஸ்பிபி மகன் சரணிடம் பேசி தனது ஆறுதலைத் தெரிவித்தார். பின்னர் எஸ்பிபியின் உடல் அருகில் சென்ற அவர் அவரைக் காலைத் தொட்டு வணங்கி இறுதி மரியாதையைச் செய்தார்.

பின்னர் அனைவரின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற 24 போலீஸார் துப்பாக்கியைத் தாழ்த்தி மீண்டும் மரியாதை செலுத்தினர். பின்னர் 24 போலீஸார் அரசு மரியாதை செலுத்தும் வகையில் வானை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட, 72 குண்டுகள் முழங்க எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் முன்னின்று செய்தார். எப்போதும் ஆயுதப்படை போலீஸார் மட்டுமே சாதாரண தொப்பியுடன் இருப்பார்கள். ஆனால், திருவள்ளூர் போலீஸார் அதற்குரிய சீருடையுடன் வந்து எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here