‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’: ஸ்டூடியோ அதிபரை கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக் கொன்றதாக வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீரராகவர் சாமி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (36). இவர் காக்களூர் புட்லூர் செல்லும் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருக்கு அனிதா (31) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மதியம் 2 மணி அளவில் தினேஷ்குமார் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தினேஷ்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி ஓடியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணையா, சித்ராதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சக்திவேல், புஷ்பராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த பிரகாஷ் (33) மற்றும் அவரது கூட்டாளிகளான ராயபுரத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் (25), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜி (25). எர்ணாவூரை சேர்ந்த கார்த்திக் (25), எண்ணூரை சேர்ந்த மகேஷ் (25), தண்டையார்பேட்டை சேர்ந்த சூரியா (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரகாஷ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

‘சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் எனக்கு கோட்டீஸ்வரி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நாங்கள் இதற்கு முன்பு திருவள்ளூர் அடுத்த காக்களூரில் வசித்து வந்தோம். அப்போது என் மனைவிக்கும் அப்பகுதியில் உள்ள போட்டோ ஸ்டூடியோ அதிபர் தினேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதையறிந்து ஆத்திரமடைந்த நான் தினேஷ்குமாரை நேரில் அழைத்து கள்ளக்காதலை விட்டுவிடும்படி கூறினேன். ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என் மனைவியை தனிமையில் சந்தித்து வந்தார். இது தொடர்பாக தினேஷின் மனைவி அனிதாவிடம் சொன்னேன். இதனால் அவர்களுடைய ஏற்பட்ட தகராறில் அனிதா, தினேஷ்குமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

நானும், என் மனைவியை சென்னை புதுவண்ணாரப்பேட்டைக்கு அழைத்து சென்ற நிலையிலும், 2 பேரும் தங்கள் தொடர்பை நிறுத்தாமல் தொடர்ந்து பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு என் மனைவியை கள்ளத் தொடர்பை விட்டு விடும்படி கூறி அடித்து உதைத்தேன். அவர் என் மீது சென்னை ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதை தொடர்ந்து போலீசார் என்னை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நான் ஜாமீனில் வெளியே வந்தேன். என் மனைவியின் கள்ளக்காதலால் மன உளைச்சலுக்கு ஆளான நான் இதற்கு தீர்வு கட்ட சென்னையை சேர்ந்த எனது நண்பர்களான சூர்யா, மகேஷ், கார்த்திக், ராஜி, அப்துல் அஜீஸ் ஆகியோர் உதவியுடன் தினேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி 6 பேரும் மோட்டார் சைக்கிளில் காக்களூருக்கு வந்து தினேஷ்குமார் ஸ்டூடியோவுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பிவிட்டோம். இருப்பினும் போலீசார் எங்களை எப்படியோ கண்டுபிடித்து கைது செய்தனர்’ என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here