தடை அதை உடை: திட்டமிட்டபடி இன்று தமிழ் கட்சிகள் உண்ணாவிரதம்!

மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி- தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் இணைந்து அழைப்பு விடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

உண்ணாவிரதத்தை முறியடிக்க- குழப்பி, தடுத்து நிறுத்த அரச இயந்திரம் முழு வீச்சில் செயற்பட்டு வருவதால் இன்று என்ன நடக்குமென்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமது உறவுகளை அஞ்சலிக்கும் உரிமையை அரசு நசுக்கும், உரிமை மீறலுக்கு எதிராக- மக்களை வழிநடத்தும் பொறுப்புமிக்க அரசியல் கட்சிகளாக, முதலில் உண்ணாவிரதத்தை தாம் நடத்துவதென்றும், அதை தொடர்ந்து நாளை மறுநாள் வடக்கு கிழக்கு தழுவிய முழு கதவடைப்பு நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தை தடுக்க நீதிமன்றங்களின் மூலம் அரசு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் திட்டமிட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து, மாற்று ஏற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாற்று ஏற்பாட்டை முன்னரே அறிவித்தால் பொலிசார் சுலபமாக குழப்பி விடுவார்கள் என்பதால், அந்த இடம் குறித்து இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

தமிழ் கட்சிகள் உண்ணாவிரதத்தை திட்டமிட்டுள்ள இடம் குறித்த தகவலை பெற பொலிசார் நேற்றிரவு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் வட்டாரங்கள் தமது ஊடக தொடர்புகளை பயன்படுத்தியும் தகவல் பெற முயன்றதாக தகவல்.

இன்று காலைதான் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களிற்கு போராட்ட இடம் குறித்த தகவல் வழங்கப்படும்.

இதையடுத்து, நேற்று இரவு முதல் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களை பொலிசார் இரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நடமாட்டங்களின் மூலம் போராட்ட இடத்தை அறிந்து, போராட்டம் ஆரம்பித்ததும், அதை தடுத்து நிறுத்த பொலிசார் முழு வீச்சில் செயற்படுகிறார்கள்.

இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பலர், எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இன்றைய போராட்டத்தில் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார்.

இதேவேளை, நினைவேந்தலிற்கு யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை, மல்லாகம் பொலிசார், நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

அதேபோல, மட்டக்களப்பிலும் உண்ணாவிரதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கும் நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், யாழில் மாற்று இடமொன்றில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும்.

பொலிசார், ஒட்டுக்குழுக்கள் அதை குழப்ப முயற்சிப்பார்கள் என்பதால், இன்று நிச்சயம் ஒரு பரபரப்பான நிலைமை ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here