நினைவேந்தல் எமது உரிமை: கோட்டாவிற்கு தகவல் அனுப்பியது வலி.கிழக்கு பிரதேசசபை!

உயிர்நீர்தவர்களை நினைவுகூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு கிடைக்கத்தக்கவாறு ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைநகல் (பக்ஸ்) மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதற்கான விசேட பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு சபை ஆதரவு கோரப்பட்ட போது சபையில் பிரசன்னமாயிருந்த உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர்.

இவ்விடயத்தில் பிரேரணையினைச் சமாப்பித்து கருத்துரைத்த தவிசாளர், போரில் நேரடியாகத் தொடர்பு பட்டும் தொடர்புராமலும் உயிர்நீத்தவர்களை அஞ்சலிப்பதற்கு எமது மக்களுக்கு உரிமை உண்டு. நினைவு கூர்தல் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். சர்வதேச சமவாயங்கள் ரீதியிலும் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதற்கான சகல உரிமையும் எமக்குண்டு.

இந் நிலையில் தற்போது நினைவு கூர்தலுக்கு பல்வேறுபட்ட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் அரசாங்கம் நாட்டில் நினைவுகூர்தலுக்கான உரிமையைக் கேள்விக்குட்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி அலகு என்ற வகையில் நாம் கோருகின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here