எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்!

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதியம் 1:04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அறிவித்தார். அவருக்கு வயது 74.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.

மேலும், எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக அவருடைய மகன் சரணும் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துவந்தார். கடந்த வாரம், அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், “மருத்துவர்களுக்கு நன்றி“ என அவர் காகிதத்தில் எழுதிக் காட்டியதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6:30 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மேலும், எஸ்.பி.பியின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்ததாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடல்நிலை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டையில் ஜூன் 4, 1946 இல் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பிக்கு சாவித்திரி என்ற மனைவி.

காதல் மணம் புரிந்த இந்தத் தம்பதிக்கு பல்லவி, சரண் என இரண்டு பிள்ளைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’. இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

“துடிக்கும் கரங்கள்“ படம் தொடங்கி பல்வேறு மொழிகளில் 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 50 படங்களுக்கு மேல் நடிக்கவும் செய்திருக்கிறார் எஸ்.பி.பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here