ராகுலின் ராஜ்ஜியத்தில் கோலி காலி; ஆர்சிபியை நசுக்கிய கிங்க்ஸ் பஞ்சாப்: சச்சின் சாதனை முறியடிப்பு!

ராகுலின் ஆகச்சிறந்த சதம், நம்பிக்கையளிக்கும் இளம் வீரர்கள் முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய் ஆகியோரின் நெருக்கடி சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கோலியின் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 97 ரன்கள் வித்தியாத்தில் தோற்கடித்தது ராகுலின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 97 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெறும் 2வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இரு ஐபிஎல் சீசன்களுக்குப் பின் கோலியின் ஆர்சிபி அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது.

சாதனை மழை

கடந்த 2011ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே பஞ்சாப் அணியின் அதிகபட்ச ரன்கள் வெற்றியாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது 2வது அதிகபட்ச ரன்கள் வெற்றியாகும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோரை தனி ஒருவனாக கட்டமைத்தார் கே.எல்.ராகுல். தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் இறுதி ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 69 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் கராணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் ராகுல் பெற்றார்.

அரைசதத்தை 36 பந்துகளில் எட்டிய ராகுல், அடுத்த 26 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி சதத்தை நிறைவு செய்தார். ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்டெயின், உமேஷ் யாதவ், துபே பந்துவீச்சை விளாசித் தள்ளினார் ராகுல்.

ராகுலுக்கு மட்டும் ஆர்சிபி கப்டன் விராட் கோலி இரு கட்சுகளை நேற்று நழுவவிட்டு அவர் சதம் அடிக்க பெரும் துணையாக அமைந்தார். ஒரு கப்டன் எவ்வாறு அணியை வழிநடத்திச் சென்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை கோலிக்கு நேற்று பாடம் எடுத்துவிட்டார் ராகுல்.

ஐபிஎல் போட்டிகளில் ராகுல் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராகுல் 63 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் ராகுல் நேற்று அடித்த 132 ரன்களாகும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு சதத்துக்கு மேல் அடித்த 6வது இந்திய வீரர் எனும் பெருமையை ராகுல் பெற்றார். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கு கப்டனாக இருக்கும் வீரர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோரையும் ராகுல் நேற்று பதிவு செய்தார்.

சச்சின் சாதனை முறியடிப்பு

ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பட்டியலி்ல் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்ஸில் சாதனை செய்திருந்தார். ஆனால், சச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல் 60 இன்னிங்ஸில் 2 ஆயிரம் ரன்களை எட்டினார். ஆனால், கெயில் 48 இன்னிங்ஸில் 2 ஆயிரம் ரன்ளை எட்டியுள்ளார் என்பது தனிக்கதை. ஒட்டுமொத்தத்தில் ராகுலின் இன்னிங்ஸ் நேற்று ஆகச்சிறந்ததாக அமைந்தது.

சூப்பர் கூட்டணி

ராகுலுக்கு ஒத்துழைத்த அகர்வால் (26), பூரன் (17) ரன்கள் சேர்த்தனர். நாயர் 15 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு அகர்வால், ராகுல் கூட்டணி 57 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். பவர்ப்ளேயில் 50 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கட்டுக்கு பூரன், ராகுல் ஜோடியும் 57 ரன்கள் சேர்த்தனர். 4வது விக்கெட்டுக்கு கருன், ராகுல் இணை 78 ரன்கள் என சிறப்பான கூட்டணி இருந்தது.

ராகுலின் வி்க்கெட்டை கழற்றமுடியாமல் கோலி பல்வேறு பந்துவீச்சாளர்களை மாற்றியும் கடைசிவரை பலனில்லை. ஆனால், கோலியே 2 கட்சுகளை கோட்டைவிட்டார் என்பது வேறு விஷயம்.

அசத்திய இளம் பந்துவீச்சாளர்கள்

பஞ்சாப் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஸ்னோய், தமிழக வீரர் முருகன் அஸ்வினின் பந்துவீச்சு, நொந்துபோன ஆர்சிபிக்கு ஈட்டியால் குத்தியதுபோன்று இருந்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆர்சிபி அணி, இருவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின், பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் கராணமாக அமைந்தனர்.

காட்ரல், ஷமி அதிர்ச்சி

இதில் காட்ரெல், முகமது ஷமி இருவரும் தொடக்கத்திலேயே ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து கடைசிவரை ஆர்சிபி மீளவில்லை. படிக்கால், கோலி விக்கெட்டை காட்ரெல் சாய்க்க, ஜோஸ் பிலிப் விக்கெட்டை ஷமி எடுத்தார். 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து செய்வதறியாது திகைத்து ஆர்சிபி அணி. இந்த திகைப்பிலிருந்து கடைசிவரை மீளவில்லை.

தொடக்கத்தில் ஆர்சிபி அணியை நிலை குலையச் செய்த பஞ்சாப் வீரர்கள் அதை கடைசி வரை பயன்படுத்திக் கொண்டனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர்.

அனைத்திலும் மோசம்

207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்கைத் துரத்திச் சென்ற ஆர்சிபி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பந்துவீ்ச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு அனைத்திலும் நேற்று ஆர்சிபி அணி மோசமாக இருந்தது.

அதிலும் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக கருதப்பட்ட ஸ்டெயின் நேற்று 57 ரன்களும், உமேஷ் 35 ரன்களும் வாரி வழங்கினர். தயவு செய்து உமேஷ் யாத் யாரிடம் பயிற்சி எடுத்தார் எனச் சொல்லிட வேண்டும், இவ்வளவு மோசமாக பந்துவீச காரணம் என்ன எனத் தெரியவில்லை.

ஸ்டெயின் கிரிக்கெட் வாழ்க்கையெல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அவரை ஆர்சிபி ஏன் வைத்திருக்கிறது என்ற கேள்வி நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு எழுந்திருக்கும்.

மானத்தைக் காத்த சுந்தர்

இந்த ஆட்டத்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஓரளவுக்கு உருப்படியாகப் பந்துவீசினர். அதிலும் நன்றாகப் பந்துவீசும் சுந்தருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கோலி கொடுத்தார். துடுப்பாட்டத்திலும் ஆர்சிபி மானத்தை காப்பாற்றிய சுந்தர் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 30 ரன்களும் இல்லாமல் இருந்திருந்தால், ஆர்சிபி தோல்வி படுமோசமாக அமைந்திருக்கும்.

ஊக்க உணர்ச்சியே இல்லையா

ஒரு போட்டியை தீர்மானிப்பதே வீரர்களின் தரமான ஊக்க உணர்ச்சிதான். இந்த தரமான ஊக்கஉணர்ச்சி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் எப்போதும் ஆழமாகவும், அதிகமாகவும் இருக்கும். அதனால்தான் அவர்களால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெல்ல முடிகிறது, சிலநேரங்களில் வெற்றிக்கு அருகே வரை சென்றும் தோற்கிறார்கள்.

ஆனால், ஆர்சிபி அணியின் கப்டன் கோலிக்கும், வீரர்களுக்கும் ஊக்க உணர்ச்சி என்பதே சுத்தமாக இல்லை. அதாவது, போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆழ்ந்த தாகம் என்பதே இருப்பதாகத் தெரியவில்லை.

வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அதுவே வெற்றி பெற்றால், வானத்தில் பறக்கின்றனர். ஆனால், பாவம் என்ன செய்ய ஆர்சிபி ரசிகர்கள் தங்கள் அணி ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கோலிக்கும், தோனிக்கும் இடையே இருக்கும் வேறுபாடும், சிறந்த கப்டன் யார் என்பதற்கும் அடையாளம் இதுதான். மிகப்பெரிய இலக்கு அமைந்துவிட்டால் திட்டமிட்டு தோனி செயல்படுவார்.

இலக்கை அடைய முடியவில்லை என்றால் ரன்ரேட்டை தக்கவைக்க முடிந்தவரை போராடுவார். ஆனால், கோலிக்கு இந்த தீர்மானமும் இல்லாமல் அணியையும், ரன்ரேட்டையும் பாதளத்தில் தள்ளி இருக்கிறார்.

சரிந்த வீரர்கள்

ஆர்சிபியில் சேர்ந்தாலே துடுப்பாட்டக்காரர்கள் இப்படி விளையாடுகிறார்களா. அல்லது துடுப்பாட்டக்காரர்களிடம் பிரச்சினையா என்பது தெரியவில்லை. முக்கியமான துடுப்பாட்டக்காரர்களாக டிவில்லியர்ஸ் (28), பின்ஞ்ச் (20), கோலி (1) என மூன்று முக்கியத் தூண்களும் விரைவாகவே சாய்ந்து விட்டன.

கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த படிக்கல் (1), பிலிப் (0) என வீழ்ந்தனர். 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன்பின் பின்ஞ்ச், டிவில்லியர்ஸ் ஓரளவுக்கு நின்றனர். ஆனால், அந்தக்கூட்டணியும் 53 ரன்களில் பிரிந்தது. இந்த ஆட்டத்தில் அதிகபட்ச பாட்னர்ஷிப்பே 49 ரன்கள்தான்.

டிவில்லியர்ஸ், பின்ச் ஆட்டமிழந்தபின் அடுத்தடுத்து வந்த துடுப்பாட்டக்காரர்கள் பொறுப்பற்ற முறையில் வெளியேறினர். 83 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 26 ரன்களுக்கு மீதிமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை எளிதாக ஏற்றுக்கொண்டு வெளியேறியது.

ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ், துபே, பின்ஞ்ச், சுந்தர் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல் வெளியேறினர்.

17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆர்சிபி அணி அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here