8 கொலை… ஹெரோயின் கடத்தல்… கப்பம்: அதிகாலையில் பொலிசார் ‘போட்ட’ ரௌடியின் அதிர்ச்சி பின்னணி!

இலங்கையின் பயங்கரமான ரௌடிகளில் ஒருவரான கொனாகேவிலே ரொஹா என அழைக்கப்பட்ட தேவமுனி ஹெரல் ரோஹன த சில்வா நேற்று (24) பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோட்டாபாய ஜனாதிபதியான பின்னர், ரௌடிகள் தப்ப முயன்றார்கள், சுட முயன்றார்கள்- பதில் தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்திகள் வாடிக்கையாகி வரும் நிலையில், இந்த செய்தியும் அப்படியொன்றுதான்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை கம்மல்தொட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார்.

குருநாகலில் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் என ஏராளம் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளது.

ரோஹா, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகி கொண்டிருந்தபோது பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடற்கரையோரமாக வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கம்மல்தொட்டவில் உள்ள அந்த வீட்டை பெலியகொட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்து, அவரை கைது செய்ய முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓட முயன்றனர்.

இரு தரப்பிற்குமிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரோஹா கொல்லப்பட்டார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் மறைந்திருந்த ரோஹாவின் அடியாள் என சந்தேகிக்கப்படும் மற்றொரு பாதாள உலக உறுப்பினர் பொலிசாரிடமிருந்து தப்பிவிட்டார்.

ரோஹாவிடம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, டி -56 துப்பாக்கி மற்றும் 300,000 ரூபா இந்தியப்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

குருநாகல் புத்தளம் வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொலிஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றது உட்பட எட்டு கொலை வழக்குகள் ரோஹா மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோன் மற்றும் டி.ஐ.ஜி பஞ்ச்ரசாத் ரணசிங்க ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு ரோஹா படகில் நீர்கொழும்பிலிருந்து தமிழகத்திற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் பெற்றனர்.

அதன்படி, பேலியகொட குற்றப் பிரிவு தலைமை ஆய்வாளர் நிவுன்ஹெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் குழு பல நாட்கள் கொச்சிக்கடை பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ரோஹா உள்ளிட்ட ரௌடிகள் குழு தங்கியிருந்த கடற்கரையோர வீட்டை நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்தனர். ரௌடிகளை கைது செய்ய முயன்றபோது, துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாரின் தாக்குதலில் ரோஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெப்ரவரி 18, 1979 இல் பிறந்த கொனாகேவிலேவைச் சேர்ந்த தேவமுனிகே ஹரோல்ட் ரோஹன டி சில்வா அல்லது ரோஹா, ஒரு பிரபல பாதாள உலகத் தலைவராக மாறினார். அவர் மவுண்ட் லவ்னியா, இரத்மலானை மற்றும் பாணந்துறை பகுதிகளை மையமாகக் கொண்டு பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டார்.

2016 நவம்பர் 15 ஆம் திகதி இரவு புத்தளம் வீதியில் உள்ள பாரடைஸ் ஹோட்டலில் தங்கியிருந்த ரோஹா உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரை கைது செய்யச் சென்ற குருநாகல் பொலிசார் மீது ரௌடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் குருநாகல் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தசநாயக கொல்லப்பட்டார். மேலும் இரண்டு அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர்.

மேலும், பாதாள உலகக் கும்பலின் தலைவரான சின்ஹரேஜ் சுரேஷ் அசங்க டி சில்வா அல்லது லான்சியா, மகர நீதிமன்றத்தின் முன், ஜூன் 23, 2016 அன்று கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு ஓகஸ்ட் 17 அன்று கல்தேமுல்ல பகுதியில் ஷிட்ராமல் பெரேரா என்பவரை சுட்டுக் கொன்றார்.

ஓகஸ்ட் 12, 2007 அன்று மவுண்ட் லவ்னியாவில் உள்ள கொனாகேவிலே பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்றது, அதே ஆண்டு மே 25 அன்று கொனாகேவிலே பகுதியில் மற்றொரு நபரைக் கொன்றது, மற்றும் டிசம்பர் 31, 2002 அன்று கெசல்வத்தவைச் சேர்ந்த மொஹமட் பார்க்கரை சுட்டுக் கொன்றது ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன.

பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தல், இரத்மலானை, மவுண்ட் லவனியா மற்றும் அதைச் சுற்றியுள்ள வர்த்தகர்களிடமிலிருந்து மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களும் அவர் மீது உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொனாகேவிலேவில் பாதாள உலகத் தலைவரான ரோஹாவுக்கும் அஞ்சுவுக்கும் இடையே சில காலமாக மோதல்கள் ஏற்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். ஹெரோயின் கடத்தலால் பாதாள உலக குழுக்களிடையேயான மோதல் அதிகரித்தது.  இதில் இரு தரப்பிலிருந்தும் ஏராளமான உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here