நாடாளுமன்றத்திற்குள் மஹிந்த தரப்புடனேயே பொழுதை கழிக்கிறார்: சாணக்கியன் பற்றி சம்பந்தனிடம் முறைப்பாடு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று ஒரு பரபரப்பான முறைப்பாடு சென்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் இருவரே இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கிறார்கள் என்பதே சுவாரஸ்யமானது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல் வீரபுத்திரன் தொடர்பாக தேர்தலிற்கு முன்னரே சில விமர்சனங்கள் இருந்தன. அவர் மஹிந்த முகாமில் சில மாதங்களின் முன்னர் வரை இருந்தார், சிங்கள பின்னணியை கொண்டிருந்தார் என்ற விமர்சனங்கள் இருந்தன.

அப்படியிருந்தும் அவர் தமிழ் அசு கட்சியினால் வேட்பாளராக்கப்பட்டார். தமிழ் அரச கட்சியின் சில தலைவர்களின் தேர்தல் செலவுகளை அவர் கவனித்தார், அதனாலேயே ஆசனம் வழங்கப்பட்டது என அப்போது தமிழ் அரசு கட்சிக்குள்ளேயே விமர்சனம் இருந்தது.

போதாததற்கு, தேர்தல் பிரச்சாரத்தில், இதுவரை அரச தரப்பினர் செயற்பட்டதை போல “தண்ணீராக“ செயற்படுகிறார் என்ற விமர்சனமும் இருந்தது.

ஆனால் அவர் போட்டியிட்டார், வெற்றிபெற்றார்.

இப்பொழுது பிந்திய சுவாரஸ்யம் என்னவென்றால், சாணக்கியன் பற்றிய ஒரு முறைப்பாடு இரா.சம்பந்தனிற்கு சென்றுள்ளது.

இரா.சம்பந்தன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள- இரா.சம்பந்தன் தவிர்ந்த 9 எம்.பிக்களில்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் 5 எம்.பிக்களில், இருவர் நேற்று இரா.சம்பந்தனை நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஒருவர் வடக்கை சேர்ந்தவர், ஒருவர் கிழக்கை சேர்ந்தவர்.

அப்போது பேச்சோடு பேச்சாக, சாணக்கியன் பற்றிய ஒரு முறைப்பாட்டையும் சம்பந்தனின் காதில் அவர்கள் போட்டு வைத்துள்ளனர்.

அந்த முறைப்பாடு- இரா.சாணக்கியன் நாடாளுமன்ற அமர்வுகளில் சபா மண்டபத்தில் இருக்கும் நேரத்தை தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனேயே பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறார். ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களிற்காக அமைச்சர்களுடன் பேசுவது வேறு. ஆனால், பார்ப்பவர்களிற்கு பெரமுன எம்.பியென தோன்றுமளவிற்கு, அவர் பெரமுன தரப்புடனேயே நேரத்தை செலவிடுகிறார். சில நேரங்களில் பெரமுன தரப்புடனேயே ஓய்வறைகளிலும் தங்கியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் வெளியில் வந்தால், இப்பொழுதே நெருக்கடியிலுள்ள கூட்டமைப்பிற்கு மேலும் நெருக்கடியாகி விடும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதை பொறுமையாக கேட்ட சம்பந்தன், அவருடன் பேசுகிறேன் என கூறியதாக தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here