அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

டீன் ஜோன்ஸ் தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று நாளேடுகளில் கிரிக்கெட் தொடர்பாகக் கட்டுரைகள் எழுதுவதும், வர்ணனையாளர் பணியையும் ஜோன்ஸ் செய்துவந்தார். ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர் பணிக்காக மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஜோன்ஸ் தங்கி இருந்த நிலையில், இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரைச் சிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனளிக்காமல் ஜோன்ஸ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமாகிவிட்டார் எனும் செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், கடினமான நேரத்தில் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வழங்கும். அவுஸ்திரேலியத் தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

தெற்காசியா முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கு ஜோன்ஸ் சிறந்த தூதராகத் திகழ்ந்தார். புதிய வீரர்களையும், அவர்களின் திறமையையும் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினார்.

வர்ணனையாளர் பணியில் சம்பியனாக இருந்தார். போட்டியை அவர் வர்ணனை செய்யும் விதம் இலட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது. உலகில் உள்ள அவரின் இலட்சக்கணக்கான ரசிகர்களும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகமும் ஜோன்ஸை இழக்கிறது. ஜோன்ஸின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறோம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவுஸ்திரேலிய அணிக்காக 1984ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணிக்காக அறிமுகமான ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3,631 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும்.

1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஜோன்ஸ், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,068 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 46 அரை சதம், 7 சதங்கள் அடங்கும்.

கடந்த 1980களிலும், 1990களின் தொடக்கத்திலும் உலக கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்டக்காரராக டீன் ஜோன்ஸ் அறியப்பட்டார். கடந்த 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பை சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணியில் ஜோன்ஸ் இடம் பெற்றிருந்தார்.

உலகக் கோப்பைக்கான அணியில் டேவிட் பூன், ஜெப் மார்ஷ் ஜோடிக்கு அடுத்தாற்போல் 3வது வீரராக ஜோன்ஸ் அவுஸ்திரேலிய. அணியில் களமிறங்கி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். உலகக்கோப்பை போட்டியில் 3 அரை சதங்கள் உள்பட 344 ரன்களை ஜோன்ஸ் குவித்தார்.

இந்தியாவுக்கு எதிராக ஜோன்ஸ் டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மிகவும் முக்கியமானது. கடந்த 1986ஆம் ஆண்டு சென்னையில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

இதில் ஜோன்ஸுக்கு சென்னையின் சூழல் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது. களத்தில் துடுப்பாட்டம் செய்தபோது பலமுறை வாந்தி எடுத்தார். இதனால் அப்போது அவுஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த ஆலன் போர்டர், ஜோன்ஸால் சூழலைக் கையாள முடியாவிட்டால், குயின்ஸ்லாந்து வீரர் கிரேக் ரிட்சியைக் களமிறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால், அதன்பின் துணிச்சலாக ஆடிய ஜோன்ஸ், 210 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மறக்க முடியாத போட்டி எனப் பல முறை அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here