பப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல்: பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்!

பப்ஜி விளையாட்டின் மூலம் ஏற்பட்ட காதலால் திருவாரூரை சேர்ந்த இளைஞரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டார்.

பப்ஜி விளையாடிற்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாவதில் இருந்து தடுப்பதற்கு தடை விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே பப்ஜி விளையாட்டில் உருவான நட்பால் காதலித்து இருவர் திருமணம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளையை சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரி. இவரது மகள் பபிஷா (20) திருவிதாங்கோட்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துகொண்டிருந்தபோது படிப்பை நிறுத்திவிட்டார்.

பின்னர் அவர் மொபைல் போன் மூலம் பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த அஜின் பிரின்ஸ் (25) என்பவருடன் ஜோடி சேர்ந்து பப்ஜி விளையாடியாடியபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி பபிஷா வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து திருவட்டாறு போலீஸில் பபிஷாவின் தந்தை சசிகுமார் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 22ம் தேதி அஜின் பிரின்சுடன் பபிஷா திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீஸார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையம் அருகே உள்ள கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட காதல் திருமணம் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here