நினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு!

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை மறுத்து கோட்டாபய அரசு அடாவடியாக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தமிழர் தாயகம் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது. இதற்காக, 10 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக கூடி இன்று (24) போராட்ட அறிவிப்பை வெளியிட்டன.

திலீபன் நினைவேந்தலிற்கு எதிராக அரசு தனது சகல நிர்வாக இயந்திரங்களையும் முடுக்கி விட்டுள்ள நிலையில், இன்று யாழில் ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் சார்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

10 கட்சிகளின் சார்பில், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவிக்கையில்,

இறந்தவர்களை- குறிப்பாக தமிழ் இனத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணித்தவர்களை, இனத்தின் நலனிற்கான செயற்பாட்டில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது அந்த இனத்தை சார்ந்த அனைவருக்குமான அடிப்படை உரிமை.

இந்த அடிப்படை உரிமை சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒன்று. நாங்கள் இன்றைய சூழலில் சில விடயங்களை எமது மக்களின் முன்பாக சமர்ப்பிக்க வேண்டிய கடமையினை கொண்டுள்ளோம்.

தமிழினத்திற்கு இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை- அதுவும் இனத்தின் நலனிற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை, இனத்தினால் விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும், அந்த உரிமை சகல சந்தர்ப்பங்களிலும், சகல சூழ்நிலைகளிலும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதையும் தெரிவித்து கொள்கின்ற வேளையில், எதிர்வரும் 26ஆம் திகதி இந்த உரிமையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

அது மாத்திரமின்றி, இந்த உரிமையை வலியுறுத்தும் விதமாகவும், முன்னெடுக்கும் விதமாகவும் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையை பிரார்த்தனை நாளாக அனுட்டிக்குமாறு தமிழ் மக்களிடம் கோருகிறோம். ஆலயங்கள், தேவாலயங்களில் அல்லது இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்வதன் மூலம், அதை அனுட்டிக்க முடியும்.

தமிழ் மக்களிற்கு மறுக்கப்பட்டுள்ள இந்த உரிமை மீறலுக்கான எமது ஆட்செபணையையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.

கதவடைப்பு, வேலை நிறுத்தம் என்பனவற்றை உள்ளடக்கிய ரீதியில் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.

இன்றைய நிலையில் இந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை தமிழினத்தின் மத்தியிலுள்ள பொறுப்புமிக்க அரசியல் கட்சியென்ற ரீதியில், அந்த பொறுப்பு எங்களை சார்ந்து நிற்கிறது என்பதையும்,

எமது எதிர்ப்பை அமைதியாகவும், சாத்வீகமாவும் எமது மறுக்கப்பட்ட உரிமைக்கு எதிராக எமது மனஉணர்வை வெளிப்படுத்துவோம்.

இந்த போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கிலுள்ள பொதுஅமைப்புக்கள், கிராமமட்ட அமைப்புக்கள் தமது முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும்.

இதேவேளை, தமிழ் மொழி பேசும் முஸ்லிம் சகோதர சமூகத்தின் சார்பிலான அரசியல் கட்சிகளின் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம். மலையக தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தமது தார்மீக ஆதரவை வழங்க வேண்டுமென கோரி நிற்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here