இந்திய நிதி உதவியில் மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியானது இந்திய நிதி உதவி 80 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடிய கணித விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணணி கூடம், வகுப்பறைகள், நிர்வாக அலகு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்துடன் 04 மாடி கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியாகி உள்ளது. இந்த கட்டிட தொகுதிக்கு மேலும் 15 மில்லியன் ரூபா செலவில் ஆய்வுகூட உபகரணங்கள் கணணிகள் அனைத்து பிரிவிற்குமான தளபாடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை கொழும்பு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.

இந்த செயற்திட்டம் குறித்தான மீளாய்வு கலந்துறையாடல் ஒன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் அரசியல் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆலோசகர் திருமதி பானு பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

நேற்று (23) இந்த கலந்துறையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், வேலுகுமார், எம். உதயகுமார், கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டிட அபிவிருத்திற்கான பனிப்பாளர் கலாநிதி அபேசுந்தர, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திட்ட பனிப்பாளர் எஸ்.முரளிதரன் உட்பட அதிகாரிகளும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் நிகழ்ச்சிதிட்ட பணிப்பாளர்கள், புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா.திருஞானம், ஆசிரியர்களான பி.கமல்நாதன், ஜி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது முன்னெடுக்கப்பட்ட மலையக பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பான விடயங்களின் முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் படி மலையத்தில் காணப்படும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் ரூபா செலவிலும் மேலும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம், ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம், நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம், கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டிய டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம், குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம், கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம், பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ் வித்தியாலயம், காலி மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபடவுள்ளன.

இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன. தொடர்ந்து மேலும் மலையகத்தில் பின் தங்கியுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதற்கும் அனுமதி கிடைத்துள்ள அதே நேரம் தெரிவு செய்யபட்ட பாடசாலைகள் முன்மொழிப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here