இன்று மதியம் அதிரடி அறிவிப்பு: சனி உண்ணாவிரதம், திங்கள் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு?

இன்றைய கலந்துரையாடலிற்கு முன்னதாக அஞ்சலி செலுத்திய போது

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு தடைவிதித்து, தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை தடுத்துள்ள கோட்டாபய அரசின் அத்துமீறலை எதிர்கொள்ள ஓரணியில் திரண்டுள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இன்று (23) சந்தித்தனர்.

நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். இதில், பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், புளொட் சார்பில் பா.கஜதீபன், சுன்னாகம் தவிசாளர் தர்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ், திலீபன், தமிழ் தேசிய கட்சி சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பில் நாளை யாழ் நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கவுள்ளது. அரசின் கொள்ளை முடிவின் அடிப்படையில் நாளை நினைவேந்தலிற்கு சாதகமான தீர்ப்ப வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லையென அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நினைவேந்தல் தடை செய்யப்பட்டால் அடுத்து என்ன செய்வதென அங்கு விலாவாரியாக ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்துடன் தொடர்புடைய விவகாரம் மற்றும் நீதிமன்றங்களின் மூலம் போராட்டங்கள் தடுக்கப்படும் வாய்ப்பிருப்பதால், விவகாரத்தை சமயோசிதமாக கையாள தீர்மானிக்கப்பட்டது.

நாளை பகல் யாழ் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அனேகமாக 12 மணிக்கு முன்னர் தீர்ப்பையளிக்கும் என்பதால், 12 மணிக்கு மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாட்டை அறிவித்து, மாற்று நடவடிக்கை அறிவிக்கப்படும்.

அந்த மாற்று நடவடிக்கை- நினைவேந்தல் உரிமையை ஜனநாயக வழியில் வலியுறுத்துவாக அமைந்திருக்கும்.

எப்படி வலியுறுத்துவது என்பது குறித்தும் தீவிரமாக அலசப்பட்டது.

உண்ணாவிரத போராட்டம், கதவடைப்பு போராட்ட வழிமுறைகளும் ஆராயப்பட்டது. இரண்டுக்கான சாத்தியங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதெனில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பெயரில் பொலிசார் இடையூறு விளைவிக்ககூடும் என்பதால், அதை எப்படி எதிர்கொள்வதென்பது பற்றியும் விலாவாரியாக திட்டமிடப்பட்டது.

நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தால், எந்த சிக்கலுமில்லை. அனைத்தும் சுமுகமாக நடக்கும்.

நினைவேந்தலை தடைசெய்து உத்தரவிட்டால், நாளை மதியம் 12 மணிக்கு கூடும் தமிழ் கட்சிகள் மதியம் 1 மணிக்கு சில அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும்.

அனேகமாக, சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டமும், திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டமும் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here