பொட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பிற்கு காரணம் வெளியானது!

ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் வசித்த யானைகள் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர் நிபுணர்கள்.

நின்ற இடத்திலேயே சுற்றுவது, பின்னோக்கி நடப்பது போன்ற வித்தியாசமான செயல்களை அந்த யானைகள் செய்ததாக முன்பு கூறப்பட்டது. நின்ற இடத்திலேயே விழுந்து இறந்த அந்த யானைகளை யாரும் தந்தத்துக்காக வேட்டையாடப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மரணங்களுக்கு தண்ணீரில் உருவாகும் விஷத் தன்மையுடைய பக்டீரியா தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அங்கு 130,000க்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. ஆகையால் இவை வேட்டையாடவில்லை என தெரியவந்தது. ஆனாலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

நரம்பியல் தொடர்பிலான நோய் அல்லது கொரோனா தொற்று போன்ற நோய்த் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இறந்துபோன யானைகளின் உடலில் இருந்து பரிசோதனை மாதிரிகள் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் உருவாகக்கூடிய ‘சயனோ’ எனும் நச்சுத்தன்மை கொண்ட பக்டீரியாதான் யானைகளின் மரணத்துக்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பக்டீரியா நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது.

ஆனால், அங்கு தேங்கிக் கிடந்த தண்ணீரை அருந்திய மற்ற உயிரினங்கள் உயிரிழக்கவில்லை என்பதால், ஆய்வுகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here