ஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

எட்டு மாதங்களில் ஆட்சிக்கு வருவோம் என்று ஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் மக்களை நம்புகிறோம். ஜோதிடம் மூலம் ஆட்சிக்கு வர முடியாது. மக்கள்தான் யார் ஆட்சிக்கு வரமுடியும் என முடிவு செய்வார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

”காவல் நிலையங்களில் லாக்கப் டெத் நடப்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடக்கிறது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை இல்லாமல் எதுவும் முடிவெடுக்கப்படாது.

ஸ்டாலின் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கிறோம் என்கிறார். பில்டப் செய்துகொள்ள வேண்டியதுதான். அவர் ஆன்லைன் மூலமாக கட்சியை வளர்க்கிறார். நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்கிறோம்.

வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் பேட்டி அளிக்கிறார். நாங்கள் ஊர் ஊராகச் சுற்றுகிறோம். அதையும் ஊர் ஊராக சுற்றுகிறோம் என்று சொல்கிறார். ஊர் ஊராகச் சுற்றுவது தவறா? இவர் வீட்டுக்குள்ளேயே கூலிங்கிளாஸ், கை கிளவுஸ், ஷூ போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கிறார். நாங்கள் அப்படி எல்லாம் செய்வதில்லை. இறைவன் கொடுத்த உடல் இருக்கிறது. மக்களுக்கான பணியில் ஈடுபடுகிறோம்.

ஸ்டாலின் 8 மாதங்களில் ஆட்சி மாற்றம் என்று சொல்கிறார். அவர் ஜோதிடத்தை நம்பி முதல்வர் கனவில் மிதக்கிறார். நாங்கள் மக்களை நம்புகிறோம். செய்த பணிகளை மக்கள் முன் வைக்கிறோம். மக்கள்தான் யார் தேவை என்பதை முடிவு செய்வார்கள். ஜோதிடம் அல்ல”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here