அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மூலம் சுமணரத்ன தேரருக்கு புனர்வாழ்வளியுங்கள்!

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி, சாணக்கிய ராகுல வீரபுத்திரன்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வேண்டும்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இந்த விகாராதிபதிக்கு எதிராக உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள மக்களுக்காக பேசவேண்டும் என்ற ஒரு வினயமான கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடந்து கொண்டு விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாது.
அவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸாரை, கிராம சேவகரை, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுதல் விடுத்துள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிராக இதுவரையில் சரியான முறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து நான் பொலிஸ்மா அதிபர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு விஜயத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு விஜயத்தின் போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் கைது செய்யப்பட்டார்.

எனினும், அவர் தொடர்ந்தும் அரச அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள்ட எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் இணைந்து புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாங்கள் மத குருமாரை மதிக்கின்றோம். நாங்கள் அவர்களை மதிக்கும் அளவிற்கு அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here