கண்டி 5 மாடி கட்டிடம் இடிந்தமைக்கு நில அதிர்வு காரணமா?

இன்று காலை கண்டியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு, அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கமும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாமென பெரதெனியா பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த பேராசிரியர் அதுல சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோது இதனைத் தெரிவித்தார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் தரை தளம் கசிந்துள்ளதாகவும், பாறைத் தளத்திலுள்ள மண் அடுக்கு தளர்த்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வும், தற்போது கண்டி பகுதியில் நிலவும் பலத்த மழையும் இதற்கு காரணமாக இருக்கலாமென்றார். மழை காரணமாக, மண் அடுக்குக்குள் நீர் புகுந்துள்ளதாகவும், பாறைக்கும் கட்டிட அடித்தளத்திற்குமிடையில் இந்த மண் அடுக்கு உள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும், புவியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிடத்தின் அஸ்திவாரம் பாறையுடன் நங்கூரமிட்டிருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது என்றும், புவியியல் ஆய்வு இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்ட கட்டிடமாக இது இருக்கலாமென்றும் தெரிவித்தார்.

சரிவுகளில் வீடுகளை நிர்மாணிக்கும்போது, ​​புவியியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் மற்றும் புவியியலாளரின் பரிந்துரையின் பேரில் ஒரு கட்டிடம் கட்டப்பட வேண்டும். இந்த பரிந்துரைகளின்படி, 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடங்களின் கட்டுமானம் நடக்கவில்லை என்றார்.

இத்தகைய விபத்துகளைத் தடுக்க, சரிவுகளில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களால் உடனடியாக பரிசோதிக்கப்பட்டு அவை சரியான தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு நில அதிர்வு காரணமல்ல என மறுத்துள்ளது. மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க இதை தெரிவித்தார்.

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளிற்கும், கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்குமிடையில் பெரிய இடைவெளியுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here