ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2020 ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஜோதிட ரத்னா சிவமகாலிங்கம்  துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

18.9.2020 முதல் 12.2.2021 வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பை தேடிப் பெறுவீர்கள் தீயவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள். உங்களின் மதிப்பு மரியாதை உயரத் தொடங்கும். பண வசதி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தேக ஆரோக்கியத்தைச் சீராக பராமரிப்பீர்கள். செய்தொழிலில் வருமானம் கூடத் தொடங்கும். நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றிபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் ஆராய்ச்சி புத்தியைப் பயன்படுத்தி செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தாமதமான கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கி நல்லபடியாக முடித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சந்தோஷமாகக் கொண்டாடுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியோடு செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உடன்பிறந்தோர், பெற்றோருடன் மனம் திறந்து பேசுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் உயர்த்துவீர்கள். புதிய தொழில் நுணுக்கங்களையும், யுக்திகளையும் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறக் காண்பீர்கள்.

19.9.2021 முதல் 17.3.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனம் மாறும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக் காண்பீர்கள் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகி, உங்கள் வாழ்க்கை பாதை மாறத் தொடங்கும். முற்காலத்தில் உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். நீண்டநாளாக பார்க்க நினைத்திருந்த ஒருவரை திடீரென்று சந்திப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு புதிய சூட்சுமங்களைக் கற்றுத் தருவார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு பல சிரமங்களையும் தாண்டி அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவு ஏற்படும். சிரமமே இல்லாமல் அனைத்துப் பணிகளையும் எளிதில் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களுடன் நல்ல புரிதல் இருக்கும். பணியிட மாற்றம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தாலும் பலன் கிடைக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் லாபங்கள் மிகுதியாக கிடைக்கக் காண்பார்கள். கூட்டு சேர்வது, கடன் கொடுப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. சில புதிய முயற்சிகள் சாத்தியமாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்து அரசிடம் சமர்ப்பிக்கவும். விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சல் அதிகமாகும். பழைய கடன்கள் வசூலாகும். கூடுதல் வருமானத்துக்காக உபரி தொழில்களையும் செய்ய முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நேரடியாக தொல்லை கொடுத்தவர்கள் சற்று அடங்கி நடப்பார்கள். அதேசமயம் அவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். கட்சியில் உங்களின் திறமைக்கேற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும். காலத்திற்கேற்றவாறு தற்கால நிலைமைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள முற்படுவீர்கள்.

கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பார்கள் உங்களின் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிய கலைஞர்களின் நட்பு மலரும். அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். பெண்மணிகள் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். சமுதாயத்திற்கும் உங்களால் முடிந்த சேவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் வம்பு வழக்குகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். தேக ஆரோக்கியமும், மன வளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

*****

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைச் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் பலம், பலவீனம் இரண்டையும் புரிந்துகொண்டு கடினமாகச் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குத் தேவையான நேரத்தில் நண்பர்களும் உதவுவார்கள். செய்தொழிலை மேம்படுத்த வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் உண்டாகும்.

13. 2. 2021 முதல் 18. 9 2021 வரை உள்ள காலகட்டத்தில் சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகளும், ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் எதிரிகளும் நண்பர்களாவார்கள். உங்கள் வாழ்க்கையில் செழிப்புண்டாகும் காலகட்டமிது. கடினமான காரியங்களையும் சுலபமாகவும், சுறுசுறுப்புடனும் செய்து முடித்து விடுவீர்கள். சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து உயரக் காண்பீர்கள்.

19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைந்து விடும். உங்கள் தேக ஆரோக்கியமும், மன வளமும் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். உற்சாகமான மனநிலையுடன் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கடினமான உழைப்புக்கு நடுவில் தேக ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, தக்க நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடினாலும் உங்களின் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எந்திர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு புதிய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுகள் இந்த ஆண்டு தாமதமாகாமல் கிடைத்துவிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பின்னரே செய்யவும். போட்டிக்கேற்றபடி விலையை நிர்ணயித்து லாபமீட்டுவீர்கள்.

விவசாயிகள் விளை பொருள்களால் லாபம் அடைவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். புதிய குத்தகைகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வயல் வரப்பு வாய்க்கால் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராமல் பிறர் நலம் பேண பாடுபடுவீர்கள். விவசாயிகள் மத்தியில் உங்கள் நிலை உயரக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். இதனால் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மக்களின் உண்மையான தொண்டுகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். தொண்டர்களுக்கும் பல உதவிகள் புரிவீர்கள். உங்கள் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பீர்கள். கலைத்துறையினருக்குத் தேவையான வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளில் ரசிகர்கள் திருப்தி அடைந்து அன்பு மழை பொழிவார்கள். வெளியூர் நிகழ்ச்சிகளை சற்றுத் தள்ளிப் போடுவது உசிதம். புதிய பட வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். பொருளாதாரம் மேன்மை அடையும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உறவினர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் கேட்காமலேயே செய்வீர்கள். புதிய வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு இழப்புகளை ஈடு செய்வீர்கள்.

பரிகாரம்: திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.

*****

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுகமும், ஏற்றமான வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமும் அமையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் புகழ் உயரத் தொடங்கும்.

செய்தொழிலில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளையும் செய்வீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தாராளமாக உதவி செய்து மகிழ்வீர்கள். உங்களுக்கு எதிராக எழும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள்.

13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் வாராக்கடன் என்று நீங்கள் நினைத்திருந்த தொகை திடீரென்று கை வந்து சேரும். நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதனால் அவர்களின் அன்பும், ஆதரவும் கூடும். திறம்படத் திட்டமிட்டு செய்தொழிலில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். குழந்தைகள் கல்வியில் சாதனைகள் செய்வார்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் பெறுவீர்கள். அதேநேரம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

மற்றவர்கள் விஷயங்களிலும் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். செய்தொழிலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு, அதற்குத் தக்கபடி உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றபடி உங்களின் முயற்சிகளில் விவேகம் உயரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்தாலும் பொறுப்புகள் என்று எதுவும் புதிதாகக் கிடைக்காது; என்றாலும் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை கைநழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சில திருப்புமுனைகள் ஏற்படும். வருமானம் சீராக இருந்தாலும் செலவினங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். அலுவலகத்தில் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது உசிதம். வியாபாரிகளுக்கு மன திருப்திக்காக வியாபாரத்தை நடத்துவீர்கள். . வியாபாரத்தைத் தனித்தன்மையுடன் நேர்மையாக நடத்தி நற்பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள். சிறிய முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்துங்கள்; அகலக் கால் வைக்காதீர்கள்.

விவசாயிகள் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் மற்றும் கடன்களை உபரி வருமானத்தால் திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சிறிது செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். சக விவசாயிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடவும்.

அரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பான பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள பல தியாகங்களையும் செய்ய வேண்டிவரும். நண்பர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினர் தொழில் வகையில் போட்டி பொறாமைகளைச் சந்தித்து வந்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். சிலர் வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். ரசிகர்களின் அன்பு தொல்லைகளுக்கு ஆட்படுவீர்கள். சில புதிய முயற்சிகள் நடக்காமலும் போகலாம்; எனவே பொறுமையைக் கையாளவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்துகொண்டு அமைதி காப்பீர்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு சுய தொழில்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவமணிகள் நல்ல பெயரெடுக்க பெற்றோர்களின் அறிவுரைப்படி நடப்பீர்கள். உங்களின் அறிவாற்றலைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேருவீர்கள். உங்களின் நண்பர்களுடன் அனாவசியப் பேச்சு வேண்டாம். ஆன்மிகத்தில் மனதைச்
செலுத்தவும்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.

*****

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

18.9.2020 முதல் 12.2.2021 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பொறுமையாக இருந்து உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நல்லது கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து, தீங்குகளை துவக்கத்திலேயே வெட்டி விடுவீர்கள். உங்களின் திறமைகளை தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளை ஒதுக்கி விடுவீர்கள். உங்களின் எதிரிகளுக்கும் தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களை உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாதவாறு மாற்றி விடுவீர்கள். செய்தொழிலில் முட்டுக்கட்டையாக இருந்தவர்களும் விலகி விடுவார்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தினருடன் அமைதியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரக் காண்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பங்கு வர்த்தகம், ஸ்பெகுலேஷன் போன்ற துறைகள் மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும். வேகத்துடன் அதேசமயம் விவேகமாகவும் பணியாற்றுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். எதிர்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் காலகட்டமிது.

19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மனதிற்கினிய செய்திகளையும் கேட்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களால் நிம்மதி கிடைக்கும். செல்வம், செல்வாக்கு இரண்டும் உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். பிரச்னைகளை மாற்றி யோசித்து புதியமுறையில் அதற்குத் தீர்வு கண்டு வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலம் சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுக்குப் பயணப்படும் யோகமும் உண்டாகும். தெளிவாகச் சிந்தித்து நேர்வழியில் செயல்படுவீர்கள். போட்டி பொறாமைகள் என்று எதுவும் தலைதூக்காத காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் பரிசீலிப்பார்கள். முயற்சிகள் கைகூடும். முடிவுகள் சாதகமாக அமையும். உங்கள் வேலைகளைக் கருத்தாகச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைக்கும். வியாபாரிகள் பொறுமையைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளுடன் பரஸ்பரம் நட்பு ஏற்படும். அனைத்து வேலைகளையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவர். பணவரவு சீராக இருந்தாலும் புதிய குத்தகைகளைத் தவிர்த்துவிடவும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்களின் திறமைகளில் புதுப் பொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்புக்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். சக கலைஞர்களின் நட்பு புதிய அனுபவங்களைக் கொண்டு சேர்க்கும்.

பெண்மணிகளுக்கு குடும்ப நலம் சீராகவும், ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பார்கள். பெற்றோரின் ஆதரவும், அவர்களால் தன லாபங்களும் உண்டாகும். சிலருக்கு புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யும் யோகங்கள் உண்டாகும். இல்லத்தில் சுப காரியங்களைச் செய்து மகிழ்வார்கள். குடும்பத்தின் வருவாய் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் ஏற்படும். நன்றாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாற்றுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.


மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here