கோட்டா அரசுக்கு 3 நாள் அவகாசம்: முரண்டுபிடித்தால் அடுத்த வாரம் போராட்டம்!

தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் கோட்டா அரசின் கொடூர அணுகுமுறையை நிறுத்த தமிழர் தரப்பில் 3 நாள் அவகாசம் வழங்கப்படும். இன்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் இந்த அவகாசம் வழங்கப்படும்.

தமிழ் தேசிய கட்சிகள் என தம்மை கூறிக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று (18) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கூடியபோது, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையான- இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க வேண்டாமென கடிதம் மூலம் கோரிக்கை விடுவதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான கடிதம் இன்று ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பப்படும். இன்று காலை 10 மணியளவில் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா மற்றும் சீ.வீ.கே ஆகியோர் கடிதத்தின் வரைபை தயாரிப்பார்கள்.

காலை 11 மணியளவில் கட்சிகளின் தலைவர்கள் அங்கு கூடி, கடிதத்தை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை செய்து, ஜனாதிபதி, கோட்டாபயவிற்கு அனுப்பி வைப்பார்கள்.

கடிதத்தில் 3 நாட்களிற்குள் அரசின் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படும்.

மீண்டும் 23ஆம் திகதி மீண்டும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள். அரசின் பதில் அல்லது பிரதிபலிப்பை அவதானித்து அடுத்த கட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும். அரசு எதிர்மறையான பதிலை வெளிப்படுத்தினால், அனேகமாக 25 அல்லது 26ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய பூரண கதவடைப்பு திட்டமிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here