ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி போராட்டம்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி ஓட்டமாவடி 01 ஹூதா பள்ளிவாயல் வீதியினை விஸ்தரித்து மாணவர்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்க கோரி பெற்றோர்களால் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் மாணவர்களை விபத்தில் தள்ளாதீர், ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வாருங்கள், பிரதேச செயலாளரே, தவிசாளரே மாணவர்களின் உயிரை காப்பாற்றுங்கள், மாணவர்களின் உயிர்களை பாதுகாக்க பள்ளிவாயல் வீதியினை அகலமாக்கி தாருங்கள் என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி 01 ஹூதா பள்ளிவாயல் வீதியானது மிகவும் குறுகிய அகலமுள்ள வீதியாகக் காணப்படுகின்றது. இவ்வீதியினூடாக தினமும் பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் வாகனங்களிலும், துவிச்சக்கர வண்டிகளிலும் ஓட்டமாவடியில் இருந்து பிறைந்துறைச்சேனை, வாழைச்சேனை ஊடாக பல்வேறு பிரதேசங்களுக்கு போக்குவரத்து செய்கின்றனர்.

ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயம் இவ்வீதியில் அமைந்துள்ளதால் பாடசாலை இதன் காரணமாக பாடசாலை ஆரம்பிக்கும் வேளையிலும், முடிவடையும் வேளையிலும் மிகவும் ஆபத்தான வாகன நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றது. இதனால் மாணவர்களதும், பாதசாரிகளதும் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், பலர் காயமுற்று அங்கவீனர்களாகவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் இவ்வீதியில் அமைந்துள்ள ஹூதா பள்ளிவாயலில் மக்கள் அதிகம் ஒன்றுகூடும் ஜும்ஆ தொழுகை நடாத்தும் பள்ளிவாயலாக இருப்பதால் தொழுகைக்காகவும், திருமண பதிவு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடுவதால் மக்கள் இவ்வீதியினை பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமை உருவாகின்றது.

எனவே ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி பள்ளிவாயல் வீதியின் அபாய நிலையினை கருத்தில் கொண்டு வீதியினை விஸ்தரித்து புனரமைத்து உதவுமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் பல தடவைகள் அனைத்து திணைக்களங்களிடம் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் நான்கு மாணவர்களும் இவ்வருடம் ஒரு மாணவரும் விபத்துக்களுக்கு உள்ளாகியதாகவும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று பாடசாலை அதிபர் எம்.அபூதாஹிர் தெரிவித்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடாத்திய பெற்றோர்களால் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் திருமதி.பத்மலோஜினி லிங்கேஸ்வரன் ஆகியோருக்கு மகஜர் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன் பிரதிகள், பாதுகாப்பு செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு கலந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில் – ஓட்டமாவடி 01 ஹூதா பள்ளிவாயல் வீதியில் வாழும் மக்கள் வீதியினை விஸ்தரிப்பு செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் வீதியினை விஸ்தரித்து இந்த அரசாங்கத்தின் உதவி மூலம் காபட் வீதியாக அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here