ஆணைக்குழுவிற்கு விஜயகலா மீளவும் அழைக்கப்பட்டார்!

ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (17) அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.

சுன்னகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஞானலிங்கம் மயூரன் அளித்த முறைப்பாடு தொடர்பாக அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதில் விஜயகலா மகேஸ்வரன் தலையீடு செய்திருந்தார் என அவர் முறையிட்டிருந்தார்.

இளைஞர் ஒருவரை திருட்டு குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்து, அவரை சித்திரவதை செய்து கொலை செய்த விவகாரத்தில் அவர் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்து, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரனை சிறை அதிகாரிகள் ஆணைக்குழு முன் ஆஜர்படுத்தினர்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த ஞானலிங்கம் மயூரன் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

இதன் பின்னர் அழைக்கப்பட்ட விஜகலா மகேஸ்வரனிற்கு சாட்சியமளிக்க போதிய நேரம் இருக்கவில்லை. இதனால் எதிர்வரும் 26ஆம் திகதி அவரை முன்னிலையாகும்படி ஆணைக்குழு அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here