மக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி அதிரடி சதம்: 73/5-லிருந்து 303 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி அவுஸ்திரேலியா அசாத்திய வெற்றி!

கடைசி ஓவரில் ஆஸி. வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. ஸ்கோர் 293/7. மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ் கிரீசில் உள்ளனர், இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர் ரஷீத் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை மிட்செல் ஸ்டார்க் மிகத் தைரியமாக லோங் ஓன் மேல் சிக்ஸ் விளாசினார். 4வது பந்தில் மீண்டும் ஒரு ஸ்வீப் பவுண்டரி. 73/5 என்று திணறிய அவுஸ்திரேலியா 2 பந்துகள் மீதமிருக்கையில் 305/7 என்று அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

இதன் மூலம் 2015 க்குப் பிறகு இங்கிலாந்து தன் மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரை இழந்தது.

மான்செஸ்டரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியான வாழ்வாசாவா போட்டியில் ரொஸ் வென்ற இங்கிலாந்து கப்டன் மோர்கன் முதலில் துடுப்பாட செய்ய முடிவெடுத்தார். பேர்ஸ்டோ சதம் (112) எடுக்க, சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ் அரைசதங்களில் இங்கிலாந்து 302/7 என்று சவாலான இலக்கை எட்டியது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை 74 ரன்களுக்கும், ஸம்ப்பா 3 விக்கெட்டுகளை 51 ரன்களுக்கும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா வோர்னர் (24), பிஞ்ச் (12), ஸ்டாய்னிஸ் (4), லபுஷேன் (20) மிட்செல் மார்ஷ் (2) என்று வோக்ஸ், ஜோ ரூட்டிடம் காலியாகி 73/5 என்று 17வது ஓவரில் இருந்தது. அதன் பிறகு நம்ப முடியாத அளவுக்கு ஆடிய கிளென் மக்ஸ்வெல் (108, 90 பந்துகள்ள் 4 பவுண்டரி 7 சிக்சர்கள்), அலெக்ஸ் கேரி (106 ரன், 114 பந்து 7 பவுண்டரி 2 சிக்சர்) சேர்ந்து சுமார் 31 ஓவர்களில் 212 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் இருவரும் அவுட் ஆக கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது, ரஷீத் வீசினார் மிட்செல் ஸ்டார்க் சிக்ஸ், பவுண்டரி அடித்து முடித்து வைத்தார்.

மக்ஸ்வெல் 84 பந்துகளில் 2வது ஒருநாள் சதம் கண்டார். டாம் கரண் பந்தை பெரிய சிக்சர் அடித்து சதம் கண்ட மக்ஸ்வெல் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது 18 ரன்கள் வெற்றிக்குத் தேவையாக இருந்தது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தன் முதல் சதத்தை 106 பந்துகளில் எடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சரை தேர்ட்மேன் பவுண்டரிக்கு அடித்த போது அங்கு மார்க் உட் முன்னால் டைவ் அடித்துப் பிடித்தார்.

முன்னதாக இங்கிலாந்து படுமோசமாகத் தொடங்கியது. மிட்செல் ஸ்டார்க் முதல் 2 பந்துகளில் ஜேசன் ரோய், ஜோ ரூட்டை டக்கில் வெளியேற்றினார். ஜேசன் ரோய் முதல் பந்தில் டக் அவுட் ஆனதன் மூலம் கடந்த 6 ஒருநாள் போட்டிகளில் சராசரி 8.16 ஆக உள்ளது. ஸ்டார்க் ஹட்ரிக் பந்தை மோர்கன் எதிர்கொண்டு சமாளித்தார். சமிந்த வாஸுக்கு பிறகு ஒரு போட்டியின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் என்ற ஹட்ரிக் சாதனையை ஸ்டார்க் முறியடிப்பதை மோர்கன் நிறுத்தினார்.

இந்நிலையில் மோர்கன், பேர்ஸ்டோ இணைந்து எதிர்த்தாக்குதலில் இறங்கி 3வது விக்கெட்டுக்காக 67 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஆடம் ஸம்ப்பா தனது சிறந்த பந்து வீச்சை மீண்டும் வெளிப்படுத்த மோர்கன் 23, பட்லர் 8, வெளியேற்ற 19வது ஓவரில் இங்கிலாந்து 96/4 என்று சரிந்தது.

ஆனால் பேர்ஸ்டோ, பில்லிங்ஸ் இணைந்து மேலும் 114 ரன்களைச் சேர்த்தனர். பேர்ஸ்டோ மிக சரளமாக ஆடி தன் 10வது ஒருநாள் சதத்தை 116 பந்துகளில் எடுத்தார், அதுவும் கமின்ஸ் பந்தை பிரமாதமாக ஸ்கொயர் லெக் மேல் சிக்சர் அடித்து கம்பீரமாக தன் சதத்தை எடுத்தார்.

ஆனால் கமின்ஸ் 4 ஓவர்களுக்குப் பிறகு பழி தீர்த்தார். இன்கட்டரில் பேர்ஸ்டோ ஸ்டம்பைப் பெயர்த்தார். சாம் பில்லிங்ஸ் அரைசதம் எடுத்து ஸம்ப்பாவை ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப் போய் கட்ச் ஆனார். 41வது ஓவரில் இங்கிலாந்து 220/6 என்று இருந்தது. வோக்ஸ் 39 பந்துகளில் அதிரடி அரைசதம் அடிக்க கரன் 19 ரன்கள் எடுக்க ரஷீத் மீண்டும் 22 பந்துகளில் 36 ரன்கள் விளாச இங்கிலாந்து கடைசி 5 ஓவர்களில் 53 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து சவாலான 302 ரன்களை எடுத்தது.

தொடக்க சரிவுக்குப் பிறகு கிளென் மக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி இரட்டைச் சதக் கூட்டணி:

துடுப்பாட்டத்தில் அசத்திய கிறிஸ் வோக்ஸ் பிறகு பந்துவீச்சிலும் பிஞ்ச், ஸ்டாய்னிஸ் விக்கெட்டை சடுதியில் வீழ்த்தினார். அதிசயமாக ஜோ ரூட்டை பவர் ப்ளேயில் மோர்கன் வீசச் செய்தது புருவங்களை உயர்த்த அவரோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேவிட் வோர்னர் 24 ரன்களில் ஜோ ரூட் பந்து ஒன்று மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி ஓஃப் ஸ்டம்பைத் தாக்க அதிசயித்தபடியே வெளியேறினார். மிட்செல் மார்ஷை 2 ரன்களில் பட்லர் கட்ச் எடுக்க ரூட் வெளியேற்றினார்.

17வது ஓவரி லபுஷேன் (20) ரன் அவுட் ஆக. 5 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா கிழிந்து தொங்கியது, அப்போது கேரி, ஆர்ச்சர் பந்தை தேர்ட் மேனில் ரஷீத்திடம் கட்ச் கொடுத்தார், ஆனால் ஆர்ச்சரின் பந்து நோ-போல் ஆனது. இதுதான் திருப்பு முனை. மக்ஸ்வெலும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ரஷீத்திடம் எல்.பி.யில் ஆட்டமிழந்திருப்பார், ரிவியூ காப்பாற்றியது. மக்ஸ்வெல் 44 ரன்களில் இருந்த போது பட்லர் கட்சை விட்டார், பரிதாப பந்துவீச்சாளர் ரஷீத்.

அதன் பிறகு மக்ஸ்வெல், கேரி சேர்ந்து 35வது ஓவரில் 100 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். அவுஸ்திரேலியா 186/5 என்று இருந்தது. இங்கிலாந்து இதே தருணத்தில் 184/4 என்று இருந்தது. பிறகு லோங் ஓன் மேல் மக்ஸ்வெல் மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். 39 வது ஓவரில் 216/5. டாம் கரணை சிக்ஸ் அடித்து மக்ஸ்வெல் தன் சதத்தை நிறைவு செய்தார், 84பந்துகளில் 101 என்று மூவிலக்கம் எட்டினார். வோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி கேரி 99 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்தே ஒரு ரன் எடுத்து சதம் கண்டார் கேரி.

இருவருமே கடைசியில் அவுட் ஆக அப்போதுதான் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட ஸ்டார்க் ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். 2015க்குப் பிறகு இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே கிளென் மக்ஸ்வெல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here