சிறிதரனிற்கு வந்த புது ஆசை: நாணயச்சுழற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவாகுவாரா?; பங்காளி கட்சிகள் தனித்து இயங்குமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் குழப்பத்தில் ஈடுபட இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதி திட்டமிட்டுள்ளது. இம்முறை பங்காளிக்கட்சிகளில் ஒன்றிற்கே பேச்சாளர் பொறுப்பு செல்ல வேண்டிய நிலையில், எம்.ஏ.சுமந்திரன் அணியிடமே பேச்சாளர் பொறுப்பை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்.ஏ.சுமந்திரன் அணியில் உள்ள சி.சிறிதரனை புதிய பேச்சாளராக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பு ஒவ்வொரு நாடாளுமன்ற ஆயுட்காலத்திற்கும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஷ் பிரேமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

சுரேஷை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றும் இரகசிய நகர்வுகளை எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்து, தேர்தல் முடிவு சர்ச்சையுடன் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். அப்போது, பேச்சாளர் பதவியை இலங்கை தமிழ் அரசு கட்சியின் வசம் எடுப்பதற்கு ஒரு காரணத்தை இரா.சம்பந்தன் கண்டுபிடித்தார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற காலத்திலும் பங்காளிகளிடம் சுழற்சி முறையில்- புதிய ஒருவர் பேச்சாளராக நியமிக்கப்படுவார் என. அதன்படி, இரண்டாவதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டார்.

இப்போது மூன்றாவது பேச்சாள நியமிக்க வேண்டிய காலம். இரண்டாவது பேச்சாளரை தெரிவு செய்த போது, இனிப்பாக இருந்த விதி, இப்போது மூன்றாவது பேச்சாளரை தெரிவு செய்யும் போது தமிழ் அரசு கட்சிக்கு கசக்க ஆரம்பித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மையில் சந்தித்து கொண்டபோது, செல்வம் அடைக்கலநாதனை பேச்சாளராக நியமிப்பதென கொள்கையளவில் இணக்கம் கண்டிருந்தனர்.

எனினும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிலுள்ள சி.சிறிதரன் பேச்சாளர் பொறுப்பில் தன்னை நியமிக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்களிடமும் ஆதரவு கோரியுள்ளார். எம்.ஏ.சுமந்திரனின் பக்கபலத்துடன் பேச்சாளர் பொறுப்பை தான் திறம்பட நடத்திக் காட்டுவேன் என சக எம்.பிக்களுடனான பேச்சுவார்த்தையில் அவர் தெரிவித்து வருவதாக தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சமூகத்துடன் தொடர்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் தரப்பில் சிறிதரன் பேச்சாளராகுவது பொருத்தமாக இருக்கும் என்றும் அவரது தரப்பினர், சக எம்.பிக்களிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் சாள்ஸ் நிர்மலநாதனும் குறிவைத்துள்ள நிலையில், சாள்ஸை அண்மைய நாட்களில் சிறிதரன் சமரசம் செய்ததாக அறிய முடிகிறது.

சிறிதரன் தகுதியுடையவரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கூட்டு சிந்தனையற்ற ஒரேயொரு பிரமுகர் சிறிதரன்தான். சில கட்சிகள் கூட்டமைப்பிற்குள் உள்ளன, அவை சம பங்காளிகள் என்ற அடிப்படை விடயங்கயே புரியாதவராகத்தான் இதுவரை செயற்பட்டு வருகிறார். கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழ் அரசு கட்சியென்ற ஒற்றை சிந்தனையுடன்தான் இயங்கி வருகிறார்.

இதனால்தான் அவரை அரசியல் வட்டாரங்களில் கிளிநொச்சி ஜமீன் என குறிப்பிடுகிறார்கள். ஜமீன்தார் கால மனநிலையில் அவர் இயங்கி வருகிறார்.

அவர் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்க துளியும் பொருத்தமற்றவர், அவரை நியமிப்பதெனில் தமிழ் அரசு கட்சியின் பேச்சாளராக நியமியுங்கள், நாம் தனித்தனி பேச்சாளர்களை நியமிக்கிறோம் என மற்றைய இரண்டு பங்காளிகளும் உறுதியாக தெரிவிக்கும் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.

கடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு முடிவெடுத்து, ஆசன ஒதுக்கீடு பற்றிய தீர்மானம் மேற்கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசாவும் அதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் பங்காளிக்கட்சிகள் கிளிநொச்சியில் தமது வேட்பாளர் சிபாரிசை வழங்கியபோது, அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல், தானே தனியான பட்டியல் தயாரித்து சமர்ப்பித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளில்- யாழ்ப்பாணத்தில் த.சித்தார்த்தன் தனக்கு போட்டியாக இருக்கக்கூடும் என கருதி, பிரச்சார மேடையில் புளொட்டை மறைமுகமாக தாக்கியிருந்தார். அதே மேடையில் கஜதீபன் சுடச்சுட பதிலடி வழங்கியிருந்தார்.

தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இறுதியாக வவுனியாவில் கூடியபோது, புளொட் அமைப்பை தவிர்த்து, நாம் கூட்டமைப்பாக இயங்கலாம் என பேசினார்.

அவரது இந்த நடவடிக்கைகள், அரச தரப்பிற்கு வாய்ப்பாக- கூட்டமைப்பை உடைக்க முயற்சிக்கிறாரா என்ற பரவலான சந்தேகத்தை தமிழ் அரசு கட்சியின் தலைமையிடமே ஏற்படுத்தியிருந்தது.

இந்தவகையான சிறிதரனை பங்காளிக்கட்சிகள் ஆதரிக்குமென எதிர்பார்க்க முடியாது.

வாக்கெடுப்பில் என்ன நடக்கும்?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் தமது தரப்பு வெற்றிபெறலாமென இலங்கை தமிழ் அரசு கட்சி- சிறிதன் அணி கருதுகிறது.

எனினும், அதற்கு வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

22ஆம் திகதி கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேச்சாளர் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டு, வாக்கெடுப்பு வரை சென்றால், இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமை வரலாம். அதை பங்காளிக்கட்சிகள் வலிறுத்தும்.

இரா.சம்பந்தனை தவிர்த்தால் தமிழ் அரசு கட்சியில் 5 உறுப்பினர்கள், பங்காளிக்கட்சிகளிடம் 4 உறுப்பினர்கள்.

இலங்கை தமிழ் அரசு கட்சி 5 உறுப்பினர்களையும் போட்டியிட்டு வெற்றியீட்டவில்லை. ஒரு ஆசனம் தேசியப்பட்டியல். அது தனியே தமிழ் அரசு கட்சியின் வாக்குகளால் கிடைக்கவில்லை. கூட்டமைப்பின் மற்றைய இரண்டு கட்சிகளின் வாக்குகளாலும் கிடைத்தது. ஆனால், அந்த தேசியப்பட்டியல் நியமனத்தில் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடப்படவில்லை.தமிழ் அரசு கட்சியின் தலைவருடனும் கலந்துரையாடப்படவில்லை. ஒரு சதி முயற்சியின் மூலம் வழங்கப்பட்ட நியமனம். அந்த சதிக்கு துணைபோனதால், தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் பதவியையே துறக்க வேண்டி வந்தது.

இப்படி வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதி- தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளிற்கிடையிலான முடிவை தீர்மானிக்கும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலிருப்பதே இயற்கை நீதி. அதை அடுத்த கூட்டத்தில் பங்காளிக்கட்சிகள் இரண்டும் வலிறுத்த வேண்டும்.

இது கலையரசனிற்கு எதிரானதல்ல. சில நபர்களின் தனிப்பட்ட முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவென்பதை- அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர், தேசியப்பட்டியல் எம்.பியை தவிர்த்தால், இரண்டு தப்பும் சம அளவிலான ஆசனத்தையே கொண்டிருக்கும். அப்படியானால், நாணயச்சுழற்சியில் பேச்சாளர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.

பங்காளிகள் தனித்து இயங்குவார்களா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை ஒரு போதும் இயற்கை நீதியின் அடிப்படையில் இயங்கியதில்லை. முற்கூட்டிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் சி.சிறிதரனை நியமிக்கலாமென இரா.சம்பந்தனும் ஆதரவளித்து- தனது முன்னைய தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவும் கூடும்.

அப்படியொரு நிலைமை வந்தால், பங்காளிக்கட்சிகள் இரண்டும், முடிவை ஆட்சேபித்து வௌிநடப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. சிறிதரன் தமது தரப்பின் பேச்சாளர் அல்ல என அவை பகிரங்கமாக அறிவிக்கலாம்.

அத்துடன், அன்றைய தினமே, நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுவார்கள் என தமிழ்பக்கம் அறிந்தது.

மொத்தத்தில் சிறிதரன் தரப்பின் திடீர் ஆசை, கூட்டமைப்பில் எப்படியான குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது, 22ஆம் திகதி தெரிந்து விடும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here