ஒழுக்காற்று விசாரணைகளில் 23 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர் அரசியல் செல்வாக்கில் மீண்டும் பதவியில்

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் பொது
முகாமையாளராக கடந்தகாலத்தில் பதவி வகித்து, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அரசியல் செல்வாக்கினால் மீண்டும் அந்த பதவியை பெற்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 26.06.2019 அன்று இடம்பெற்ற இயக்குநர் சபைக் கூட்டத்தில் மூன்றாவது தீர்மானமாக ஒழுக்காற்று விசாரணை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு வ.குலசேகரம் என்பவர் ஒழுக்காற்று
விசாரணை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 26 குற்றச்சாட்டுகளில் 23 குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் மீண்டும் அச் சங்கத்தில் குறித்த பதவியை அமைச்சர் ஒருவரின்
செல்வாக்கின் ஊடாக பெற்றுள்ளமை தொழிலாளர்கள், அங்கத்தவர்கள் மத்தியில்
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அங்கத்தவர்கள் கருத்து தெரிவித்த போது, எங்களது கிளிநொச்சி
பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் சமீபகாலமாக இடம்பெற்று
வரும் நிகழ்வுகள் ஆரோக்கியமானதாக இல்லை. நாங்கள் தினமும் ஆபத்து மிக்க
தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். தினமும் மரம் ஏறி இறங்கும் வரைக்கும்
எங்களது வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. இவ்வாறு தொழிலை மேற்கொண்டுவரும் நாம் எமக்காக எமது நலன்கள் பாதுகாப்பு என்பவற்றுக்காக உருவாக்கப்பட்ட சங்கமே பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம். ஆனால் தற்போது சங்கத்தில் எமது நலன்களுக்கு அப்பால் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அதிகாரத்தில் இருப்பதற்கு அடிபாடுகள், நடவடிக்கைகளும் இடம்பெற்று
வருகின்றன. இது எமக்கு மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் ஊழல்கள் தொடர்பில்
விசாரணை மேற்கொண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் தற்போது நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளார். வடக்கில் அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் உள்ள அவர் அரசியல் செல்வாக்கின் மூலம் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி பதவிக்கு வந்துள்ளார். இது சங்கத்தை சீரழித்து விடுகின்ற நிலைமைக்கு கொண்டு
செல்லும் எனத் தெரிவித்த அவர் எங்களது சங்கத்தை இனி கடவுளாலும்
காப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி
ஆணையாளாருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. நாங்கள் ஒருபோதும் சட்ட திட்டத்திற்கு
மாறாக செயற்பட மாட்டோம். குறித்த நபர் எங்களது காசோலை நடவடிக்கைகளுக்கு
ஒப்பமிடுவதற்கும் சட்டரீதியாக தான் பொது முகாமையாளராக செயற்படுவதற்கும்
அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார் நாம் அதனை மறுத்துவிட்டோம் எனத்
தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here