ஞானசாரருக்கு எதிரான வழக்கிலிருந்து நீதிபதி விலகல்!

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்வதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் விலகியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறிஸ்கந்தாவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் யோஹித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் முன்னாள் இன்று (16) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அவருக்கு பதிலாக நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய நீதிபதிகள் வழக்கை ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

கடந்த வருடம் உயிரிழந்த முல்லைத்தீவு குருகந்த ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் இறுதி கிரியைகளை நடத்துவது குறித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஞானசார தேரர் மீறியிருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அவமதித்தாக குற்றம் சுமத்தி ஞானசார தேரர், முல்லைத்தீவு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரன், இந்த வழக்கில் பெயரிடப்பட்ட ஞானசாரர் தவிர்ந்த மற்றையவர்களிற்கு எதிராக தனது சேவை பெறுனர் நிவாரணம் கோராததால், முல்லைத்தீவு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் அதிகாரி ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சுமந்திரன் கூறினார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here