ஈழம் தடைசெய்யப்பட்ட சொல்: சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கில் பொலிசார் குற்றப்பத்திரம்!

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அஞ்சலி பதாகையில் ஈழம் என்ற சொல் பாவிக்கப்பட்டிருந்தது. அது தடைசெய்யப்பட்ட சொல் என கோப்பாய் பொலிசார் இன்று யாழ் நீதிமன்றத்தில் தெரிவித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதாகையில் இருந்த வசனங்கள்தான் அவர்களிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவிரவாக கொழும்பிலிருந்தும், மேலிடங்களிலிருந்தும் வந்த விடயங்களும், அமைச்சர் விமல் வீரவன்ச, கம்பன்பில இணைந்து பயங்கரவாதிகளை விட மோசமானவர் சிவாஜிலிங்கம், இவரை திருத்த முடியாது. அவரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என கூறியிருந்ததில் இருந்து எம்மால் ஊகிக்க முடிந்தது.

இன்று நீதிமன்றத்தில்கூட தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்பது நாட்டின் பிரிவினை என்றார்கள். தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தில் கேக் வெட்டியபோது கூட இதே வசனம் உள்ள பதாகையை பாவித்திருந்தோம்.

இன்று எமக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஈழம் என்ற சொல் தடை செய்யப்பட்ட சொல் அல்ல, தமிழ்ஈழ என்ற பெயரில் ரெலோ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உள்ளது. அதன் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அதேபோல ஈழமக்கள் ஜனநாயக கட்சியென்ற பெயரில் அரசியல் கட்சியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அதேபோல, அந்த பதாதையில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்த வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட வேண்டும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகள் அதில் இருந்தன. அவை அவர்களை ஆத்திரப்படுத்தியிருக்கலாம்.

என்னை பொறுத்தவரை தமிழ் தேசத்தின் விடுதலை பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here