கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் எப்படியிருக்கிறார் சிவாஜிலிங்கம்?

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளையே நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன்போது, யாழிலுள்ள அனேக சட்டத்தரணிகள், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் முன்னிலையாகவுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் தொடக்க நாளான இன்று, உரும்பிராயில் அஞ்சலி நிகழ்வை நடத்திய சிவாஜிலிங்கம், கோண்டாவிலில் அஞ்சலி நிகழ்வை நடத்த தயாராகியபோது, கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டதும் கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். அவரை பிணையில் மீட்கும் முயற்சியை என்.சிறிகாந்தா மேற்கொண்டுள்ளார்.

சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்ட போதும், அவர் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். உயரதிகாரிகளின் உத்தரவிற்காக பொலிசார் காத்திருப்பதாக தெரிகிறது.

நாளை அனேகமாக சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட கூடும்.

சிவாஜிலிங்கத்தை பிணையில் மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள சட்ட வட்டாரங்களுடன் தமிழ்பக்கம் பேசியது. இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்- “இன்றைய தினமே சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டு விட்டது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரியான திலீபனை நினைவுகூர முயன்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.

நாளை பயங்கரவா தடுப்பு பிரிவினர் வந்து வாக்குமூலம் பதிவு செய்யலாமென்றும் சொல்லப்படுகிறது. அப்படியொரு நிலை வந்தால், அவரை நீண்டநாள் சிறையில் அடைக்க முயற்சிக்கலாம். எது என்றாலும் நாளை காலைதான் இதுபற்றி இறுதியாக தெரியவரும்“ என்றனர்.

சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு விட்டார் என்றதும், கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்தவர்களில் ரெலோ பிரமுகர்களும் அடக்கம். சிவாஜிலிங்கம் ரெலோவிலிருந்து முரண்பட்டு வெளியேறியிருந்தாலும், சிவாஜிக்கு ஆபத்தென்றதும் ரெலோவினரும் களத்திற்கு விரைந்து விட்டனர்.

ரெலோவின் உப தலைவர் ஹென்ரி மகேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம் உள்ளிட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சிவாஜிலிங்கத்தை சந்தித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here