டெனிஸ்வரன் முன்வைத்த 4 நிபந்தனைகள்… விக்னேஸ்வரன் தரப்பு தயக்கம்: நாளையே இறுதி சந்தர்ப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது, வழக்கு தொடர்ந்த பா.டெனிஸ்வரன் வழக்கை வாபஸ் பெறுவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதும், இன்று வழக்கை கைவாங்கப்படவில்லை.

இன்று தொடக்கம் 3 நாட்களிற்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி இன்று வழக்கு விசாரணை ஆரம்பித்தது.

இன்றைய முதல்நாளில், அப்போதைய ஆளுனர் செயலாளர் சத்தியசீலனும், வடக்கு பிரதம செயலாளர் அ.பத்திநாதனும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.

இன்று வழக்கை வாபஸ் பெற போவதாக பா.டெனிஸ்வரன் முன்னர் அறிவித்திருந்த போதும், இன்று ஏன் வழக்கு வாபஸ் பெறப்படவில்லையென பா.டெனிஸ்வரனை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது-

“இன்று வழக்கை வாபஸ் பெறுவதென்றுதான் திட்டமிட்டிருந்தோம். வழக்கு விசாரணைக்கு முன்னதாக க.வி.விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணியான கனகஈஸ்வரனுடன், எமது சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ பேசினார்.

4 நிபந்தனைகளின் அடிப்படையில் வழக்கை வாபஸ்பெற தயாராக இருப்பதாக சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார். இரு தரப்பும் இணங்கினால் வழக்கை முடித்துக் கொள்ளலாமென நீதிமன்றமும் தெரிவித்தது.

1. அமைச்சரவையை பதவிநீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, விக்னேஸ்வரன் தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது.

2. பா.டெனிஸ்வரனை பதவி நீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை விக்னேஸ்வரன் அமுல்ப்படுத்தவில்லை. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமுல்ப்படுத்தாமைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவது.

3. முறையற்ற விதமான பதவி நீக்கியதற்காக பா.டெனிஸ்வரனிடம் மன்னிப்பு கோருவது.

4. இதுவரை பா.டெனிஸ்வரனிற்கு ஆன வழக்கு செலவை (சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகம்) செலுத்துதல்.

இந்த கோரிக்கைகளை எமது சட்டத்தரணி முன்வைத்தார். எனினும், விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணி கனகஈஸ்வரன், “நாம் ட்ரய் விசாரணைக்கு தயாராக இருக்கிறோம்“ என அந்த இடத்தில் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஆரம்பித்தது.

இப்பொழுது எமது தரப்பின் 4 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை கைவிட தயாராக இருக்கிறேன். இன்று இரவு எனது சட்டத்தரணியுடன் பேசும்போது, நாளைய அமர்வில் இரண்டு கோரிக்கைகளை கைவிடும்படி அறிவறுத்தவுள்ளேன். என்னிடம் மன்னிப்பு கோருவது, எனது வழக்கு செலவை செலுத்துவது ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் நாளை வலியுறுத்த மாட்டோம்.

இரு தரப்பும் இணக்கத்தை ஏற்படுத்துவதென்றால், அதற்கு நாளை காலைதான் இறுதி சந்தர்ப்பம். நாளை எனது சாட்சியம் அழைக்கப்படும். அப்படி எனது சாட்சியம் அழைக்கப்பட்டால், அதன் பின்னர் இணக்கப்பாட்டிற்கு சட்டத்தில் இடமில்லை. எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள விக்னேஸ்வரன் ஐயா தயாாக இருப்பதாகவும், ஆனால் அவரது சட்டத்தரணிகளே தடையாக இருப்பதாகவும் அறிகிறேன். மாகாணசபையின்- முதலமைச்சரின் அதிகாரமின்மையை வெளிப்படுத்த இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாமென அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது விக்னேஸ்வரன் ஐயா இந்த சிக்கலில் இருந்து வெளி வருவதையே விரும்புகிறேன்“ என்றார்.

இது தொடர்பில் பேச, க.வி.விக்னேஸ்வரன் தரப்பை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேவேளை, டெனிஸ்வரன் தரப்பு சட்டத்தரணிகளிற்கும், விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணிகளிற்குமிடையிலான ஈகோவினாலேயே இந்த சர்ச்சை உருவாகியுள்ளதாகவும், டெனிஸ்வரன் தரப்பு சட்டத்தரணிகள் சிக்கலை உருவாக்க இந்த நிபந்தனையை முன்வைத்ததாகவும், சுயாதீனமாக மன்றில் முன்னிலையாகிய சில சட்டத்தரணிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் சார்பில் நெருக்கமாக பணியாற்றும் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் பக்கத்தின் செய்திகளை லங்காசிறி குழுக ஊடகங்கள்- ஜேவிபி, தமிழ்வின் உள்ளிட்டவை- மீள் பிரசுரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here