மாங்குளத்தில் வெளியிடத்தவர்களுக்கு காணி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

ஒட்டுசுட்டான் பிரதேச காணிப் பயன்பாட்டு குழு கூட்டம் நேற்று (14) மாலை 2 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இந்த கூட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.றமேஷ், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் அ.தவக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், காணி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தின்போது மாங்குளம் பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்துக்குள் அதிகமாக வெளி மாவட்ட நபர்கள் காணி கோரிக்கை விடுத்தமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் எதிர்ப்பை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார்.

பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பங்கள் தரப்படும் போது அதனை தாங்கள் நிராகரிக்க முடியாது எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டத்தில் தீர்மானிப்பதற்காக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அது தொடர்பில் நீங்கள் ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அதனை செயற்படுத்த முடியுமென்றும் தெரிவித்தார்.

இதன்போது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்- எமது கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு காணியில்லாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  எனவே அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்க வேண்டும். முதலில் மாங்குளம் பிரதேசங்களை சார்ந்தவர்களுக்கும், அதனை தொடர்ந்து அருகில் உள்ள பிரதேசங்களில் அல்லது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டவர்களுக்கு காணிகளை வழங்க முடியும் எனவும், அதனை தொடர்ந்து வெளியிடத்தவர்களுக்கு வழங்க முடியும் எனவும் நேரடியாக வெளிமாவட்டங்களுக்கு முன்னுரிமைப்படுத்தி வழங்காமல் எமது பிரதேசத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகளவான காணியை கோரியுள்ளவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தி ஒரு குழு ஒன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய்ந்து குறித்த காணிகளை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு முன்னதாக குறித்த மாங்குளம் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை வழங்குவதாக இருப்பின் புதிய திட்ட முன்மொழிவுகள் உடன் விண்ணப்பங்களை வழங்குமாறு தெரியப்படுத்துமாறு தெரியப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த மாங்குளம் பகுதி கிராம அலுவலர் தலைமையில் வட்டார பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர், கமநல சேவை திணைக்கள உத்தியோகத்தர், கிராம பொது அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கலாக குழு ஒன்று அமைக்கப்பட்டது

குறித்த குழு தீர்மானங்களை மேற்கொண்டு அடுத்து வரும் காணி பயன்பாட்டு குழு கூட்டத்துக்கு தெரியபடுத்துமாறும் அதனடிப்படையில்அடுத்து வரும் காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் தீர்மானிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here