புதையல் தோண்டிய 11 பேர் கைது!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணானை கிராம சேவகர் பிரிவில் மயிலம்கேணி என்ற வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மேற்படி பதினொரு சந்தேக நபர்களும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடுகஸ்தோட்ட, பொலனறுவை, ஓட்டமாவடி, மீறாவோடை, வாகனேரி போன்ற பிரதேசங்களை சேர்ந்த சிங்களவர் 06 பேரும், தமிழர்கள் 03 பேரும், முஸ்லிம்கள் 02 பேருமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டப்பட்ட வயல் பிரதேசத்தின் சொந்தக்காரர் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் புதையல் தோண்டுவதற்கு பூஜை செய்த பூசாரி பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட கோழி 03 மண்வெட்டி 01 பழவகைகள் 24 பூஜைக்குரிய பொருட்கள் மந்திர புத்தகம் 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பதிநான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here