திலீபனின் தியாகத்தை உலகே அறியும்; கமல் புதுக்கதை விட வேண்டியதில்லை: இராதா காட்டம்!

“பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை போல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருப்பதானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். கடத்தல்காரர்கள் போதை வஸ்து வியாபாரிகளுடன் திலீபனை ஒப்பிட்டிருக்கின்றமையானது அவருடைய போராட்டத்தையும் அவர் சார்ந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதாக அது அமைந்துள்ளது.

யுத்தத்தை வெற்றி கொண்ட இன்றைய ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த பொழுது கூட இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை.எனவே பொறுப்பான பதவியில் இருக்கின்றவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்று (14) கருத்து தெரிவிக்கையில்

”திலீபனின் உண்ணாவிரத போராட்டம் என்பது அகிம்சை வழியிலான ஒரு போராட்டமாகும். அகிம்சை போராட்டத்தின் மூலமாகவே இந்தியாவிற்கு மகாத்மா காந்தி விடுதலையை பெற்றுக் கொடுத்தார். எனவே அகிம்சையாக நடைபெறுகின்ற போராட்டங்களை நாம் கொச்சைப்படுத்த முடியாது.

இன்று பூசா முகாமில் உண்ணாவிரத போராட்டம் இருக்கின்றவர்களின் கோரிக்கைகள் வேறு. அன்று திலீபன் உண்ணாவிரதம் இருந்த போராட்டத்தின் கோரிக்கை வேறு. அவர் தான் சார்ந்த சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராகவே உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆனால் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அன்று திலீபன் நோயாளியாக இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்ததாகவும் ஒரு பிழையான தகவலை கூறுவதற்கு முற்படுகின்றார்.

திலீபனின் போராட்டம் எவ்வளவு உண்மையானது நேர்மையான என்பதை இந்த உலகவே அறியும். அவர் தன்னுடைய சமூகத்திற்கு அகிம்சை வழியில் போராடி உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். அதனை அன்று இருந்த அரசாங்கம் செவிசாய்க்க மறுத்ததன் காரணமாகவே வடகிழக்கில் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.

அன்றைய அரசாங்கம் அன்று வடகிழக்கு இளைஞர்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் இந்த நாட்டில் ஆயுத போராட்டம் ஒன்று நடைபெற்றிருக்காது. அது நடைபெறாத காரணத்தினாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டது. எனவே திலீபனின் அந்த அகிம்சை போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here