தேவாரம் பாடச்சொல்லி விட்டு மாணவிகளுடன் அங்க சேட்டை குற்றச்சாட்டிற்குள்ளான அதிபர் வேண்டாம்: வவுனியா பாடசாலை சமூகம் எதிர்ப்பு!

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கு பொருத்தமான புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டுமென பாடசாலை பழைய மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.

பாடசாலையில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்க வவுனியா தெற்கு கல்விவலயத்தினால் அண்மையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

நேர்முகத் தேர்வில், பாடசாலை மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என்ற விவகாரத்தில் சிக்கி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சந்தித்து வரும் ஒருவரும் பங்குபற்றினார் என்ற செய்தி தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வகையானவர்களை தமது பாடசாலையின் அதிபராக நியமிப்பது மாணவர்களையும், பெற்றோரையும் பாதுகாப்பற்ற மனநிலைக்கு தள்ளும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே வவுனியா பிரதேச பாடசாலையொன்றின் அதிபராக செயற்பட்ட ஒருவர், மாணவிகளை கண்ணைமூடி தேவாரம் பாடும்படி கூறி, அவர்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக 10 மாணவிகள் முறையிட்டுள்ளனர். அதிபர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர் அங்க சேட்டையில் ஈடுபட்ட விவகாரம் வெளியானதும், பாடசாலையின் ஆசிரியர்கள் குழுவொன்று, அவரை பாடசாலைக்குள் வைத்தே நையப்புடைத்து விட்டு, அவர் கடமையிலிருக்கும் வரை பாடசாலையில் கற்பிக்க மாட்டோம் என கூறி, வெளியேறி சென்றிருந்தனர்.

இந்த நிலையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் உயரதிகாரியொருவருடனான நெருக்கத்தின் அடிப்படையில், அவர் மீள அதிபராக்கப்பட முயற்சிக்கப்படுகிறது, அவர்களுடனான நெருக்கத்திற்காக எமது பாடசாலையை பலியிடாதீர்கள் என பாடசாலை சமூகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் கிராமத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here