விக்னேஸ்வரன் காலத்தின் தேவை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட டெனீஸ்வரன் முடிவு!

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனிஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, வழக்கை வாபஸ்பெற தயார் என, க.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக அப்போது அரசியலரங்கில் பேச்சிருந்தது.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர். இவ்வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தநிலையில், விக்னேஸ்வரனை இக்கட்டில் சிக்க வைக்கும்- தமிழ் தரப்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ துணையாகி விட வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே டெனீஸ்வரன் இந்த முடிவிற்கு வந்தார்.

அடுத்த வழக்கு தவணையில், இரு தரப்பும் நீதிமன்றத்தின் வெளியே இணக்கமாக பேசி தீர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக மன்றில் தெரிவிப்பார்கள் என தெரிய வருகிறது.

எனினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கான இதில் நீதியரசர்களின் முடிவில், வழக்கின் எதிர்காலம் தங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here