முறையான திட்டமிடலின்றி முல்லைத்தீவில் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளுக்கு இன்று விசேட செயலமர்வு ஒன்று மாங்குளத்தில் இடம்பெறவுள்ளதாக பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குறித்த விசேட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக மாங்குளத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இருப்பினும் குறித்த இடத்தில் மாணவர்கள் அனைவரும் செயலமர்வில் கலந்து கொள்வதற்கு ஏற்ற எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் செய்யப்படவில்லை. குறிப்பாக நாட்டில் covid-19 ஏற்பட்டதன் பின்னர் சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் எந்தவிதமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடிய வகையிலோ அல்லது மாணவர்கள் குறித்த செயலமர்வில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வசதிகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த செயலமர்வில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளுமாறும் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் மிகத் தொலைவிலிருந்து பணம் செலவழித்து வருகை தந்த மாணவர்கள் அனைவரும் திரும்பிச் சென்று இருந்தனர்.

அதனைவிட துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கூட சரியான இட வசதிகள் மற்றும் சுகாதார, குடிநீர் வசதிகள் இன்றி சமூக இடைவெளிகளை பேணாது குறித்த செயலமர்வு இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

கல்வி திணைக்கள அலுவலகத்தின் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் காரணமாக இன்று குறித்த மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். சரியான திட்டமிடல் இல்லாத ஒரு கல்வி சமூகம் இவ்வாறு செயற்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் குறித்த செயற்திட்டத்தை ஒழுங்குபடுத்திய வலயக்கல்வி அலுவலகத்தை சார்ந்த அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை.

இவ்வாறு மாணவர்களை உரிய சுகாதார நடைமுறைகள் இன்றியும் மாணவர்களுடைய பணங்களை வீண் விரயம் செய்யக் கூடிய வகையிலும் திட்டமிட்டு செயற்பாடுகளை செய்யாது அசண்டையினமான ஒழுங்குபடுத்தல் மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here