மாங்குளத்தில் 200 ஏக்கர் காணி கோரும் யாழ், வவுனியா, கொழும்பு வாசிகள்: பிரதேச மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மாங்குளம் பகுதியில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்களுக்கு 200 ஏக்கர் காணியினை வழங்க மாங்குளம் பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இன்று வரை அவர்களுக்கான காணிகள் வழங்கப்படாத நிலையில் மாங்குளம் பகுதியில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த 29 பேர் 200 ஏக்கருக்கு மேற்பட்ட காணியினை கோரியுள்ளனர். அவர்களிற்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி ஒட்சுடுடான் பிரதேச செயலத்தில் நடைபெற்று காணியினை கேரியவர்களுக்கு காணிவழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம்,வவுனியாவினை சேர்ந்தவர்கள் தலா 40 ஏக்கர் வரையில் காணியினை கோரியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் எத்தனையோ குடும்பங்கள் விவசாயம் செய்யவும் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குமாக ஒரு துண்டு காணிஇல்லாத நிலையில் அரசாங்கம் காணிகளை வழங்கக்கூட முன்வராத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்

இவ்வாறு மாவட்டத்தினை சேர்ந்த மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தினராலும், தொல்பொருள் திணைக்களத்தினராலும், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினராலும் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில்​ வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு பண்ணை அமைப்பதற்கு காணிகளை வழங்கி மாவட்டத்தினை சேர்ந்தவர்களை தொடர்ச்சியாக கூலித்தொழிலாளியாகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளும் செயற்பாடாகவே இதனை பார்க்கமுடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான காணிவழங்கும் நடவடிக்கைக்கு மாங்குளம் பிரதேச மக்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் போராட்டம் செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணி பகுதி உத்தியோகத்தர் ஒருவரை தொடர்பு கொண்ட போது தமது பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது எனவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மக்களினதும் பொது அமைப்புக்களினதும் காணிப் பயன்பாட்டு குழுவினரின் தீர்மானங்களின் பின்னரே காணி வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க முடியும் எனவும், மக்கள் எதிர்ப்பு வெளியிடப்படும் பட்சத்தில் காணிகளை குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படாது எனவும் அது தொடர்பான அறிக்கை மாவட்ட செயலகத்திற்கு வழங்க முடியும் எனவும் தாங்கள் விண்ணப்பங்கள் தருபவர்களது விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது எனவும் குறித்த விடயத்தை காணிப் பயன்பாட்டு குழு தீர்மானிக்கும் பட்சத்தில் அந்தக் காணிகள் யாருக்கும் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்

மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக பிரதேச செயலக அதிகாரிகளது காணிப் பங்கீடு தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here