வேலணையில் கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்படும்!

வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் வேலணை பிரதேச சபையால் பிடிக்கப்படும் என்றும் வீதிகள் ஒழுங்கைகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளை உரியவர்கள் பாதுகாத்துக்கொள்ளுமாறும் வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது பயிர்ச்செய்கை காலம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பலதரப்பட்டவர்களிடமிருந்து எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாம் சமூக அக்கறையும் கால்நடைகளினது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன்பிரகாரம் சபையால் கட்டாக்காலிகளாக வீதிகள் ஒழுங்கைகள் போன்றவற்றில் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் பராமரிக்கப்படும். இவற்றை உரிமைகோரி யாராவது வரும் பட்சத்தில் பராமரிப்பு செலவை அறவீடு செய்தபின்னர் எச்சரிக்கையுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஏனையவை ஒரு சிறிது காலத்தின் பின்னர் வேலணை பிரதேசத்திற்குட்பட்டவர்களுக்கு பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுவதுடன் அதன் மூலம் வரும் நிதியை கொண்டு நல்லின பால் மாடுகள் கொள்வனவு செய்யப்பட்டு வறிய நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here