சர்வாதிகாரி போல் செயற்படும் தோட்டதுரையை உடனடியாக இடமாற்றுங்கள்: செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

சர்வாதிகாரிபோல் செயற்படும் தோட்டதுரையை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் இன்று (12) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளத்தை குறைத்து, நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடிக்கும் துரையை வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் தோட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.

ஹட்டன் பிளான்டேசன் நிர்வாகத்தின் கீழ் தான் செம்புவத்த தோட்ட மக்கள் தொழில் புரிகின்றனர். அத்தோட்டத்துக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புதிய முகாமையாளர் (துரை) ஒருவர் வந்துள்ளார். அவர் வந்த பின்னரே ‘அராஜக முகாமைத்துவம்’ ஆரம்பமானது என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

” வறட்சியான, குளிரான காலத்திலும் 18 கிலோ பறித்தால்தான் ஒரு நாள் பெயர், அவ்வாறு இல்லாவிட்டால் அரை நாள் பெயரே வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும், தொழிற்சங்கங்களை நாடியும் தீர்வு கிடைக்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட முற்பட்டால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் துரை ஈடுபடுகின்றார்.

சம்பளம் குறைவாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினால், மற்றையதொரு வவுச்சர்மூலமே எஞ்சிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இதனால் ஊழியர் சேமலாப நிதி. சேவை கொடுப்பனவு உள்ளிட்டவற்றிலும் தாக்கம் ஏற்படுகின்றது. இப்படி பல அடக்குமுறைகள் தொடர்கின்றன. இவற்றுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாரானோம். பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண்போம். தொழிலுக்கு செல்லுமாறு தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்தனர். ” என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழிற்சங்க தலைவர்களின் கோரிக்கையை ஏற்று நாம் நேற்று தொழிலுக்கு சென்றோம். ஆனாலும் ‘நான்தான் துரை. எனது அனுமதியின்றி எப்படி நீங்கள் மலைக்கு செல்லமுடியும்’ என துரை மிரட்டியதுடன் கொழுந்து நெறுப்பதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிகாரிகளையும் அனுப்பவில்லை. இதனால் நாம் கொழுந்தை மடுவத்தில் கொட்டி எதிர்ப்பில் ஈடுபட்டோம்.

இன்று (12) காலையும் பெரட்டுகளம் வந்தோம்.ஆனால் துரை வரவில்லை. அதிகாரிகளும் இல்லை. சிலவேளை நாங்கள் வேலைக்குசென்றால் வேறுகாரணங்களைக்கூறி பழிவாங்கலாம். எனவே. இந்த துரைக்கு இடமாற்றம் வழங்கப்படும்வரை நாம் போராடுவோம். தோட்டத்திலுள்ள 15 ஏக்கர் காணியையும் இவர் வெளியாருக்கு வழங்கியுள்ளார்.” எனவும் தொழிலாளர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here