மட்டக்களப்பின் பிரபல ரௌடிகள் கைது!

மட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட பிரபல ரௌடிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கிரனேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பொலிஸார் கைதுசெய்யச் சென்றபோது பொலிஸார் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்கேணி பகுதியிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராட்சியின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு விசாரணைப்பிரிவின் பதில் பொறுப்பதிகாரி முகமட் ஜெசூதி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த கைதினை மேற்கொண்டது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட வாள்வெட்டு குழுவின் தலைவரான தணு என்பவர் 2018ஆம் ஆண்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதாக நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலைவையில் உள்ள நிலையில் மேலும் ஒன்பது குற்றங்கள் தொடர்பில் வழக்குகள் நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பில் பல சிறுகுற்றச்சாட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இவரை கைதுசெய்யச்சென்ற பொலிஸாரை தாக்க முற்பட்ட நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் அந்த குழுவினை சேர்ந்த இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவுடன் தொடர்புபட்ட மேலும் நான்கு பிரதான நபர்களும் ஏனைய உறுப்பினர்கள் சிலரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் நாவற்கேணி பகுதியில் தனிமையில் வீடுகளில் இருக்கும் பெண்களையும் அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா உள்ளிட்டு போதைப்பொருள் விற்பனைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் இது தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here