இதுவரை கேள்விப்பட்டிராத அணு ஆயுத அமைப்புகள்: அமெரிக்காவிடம் உள்ளதாக பத்திரிகையாளரிடம் இரகசியம் கசிய விட்ட ட்ரம்ப்: கிளம்பும் இன்னொரு சர்ச்சை

அமெரிக்காவிடம் நம்ப முடியாத அளவுக்கு அணு ஆயுத அமைப்புகள் உள்ளன என்று ட்ரம்ப் தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான இரகசிய ஆவணத்தை பிரபல புலனாய்வு பத்திரிகையாளரிடம் ட்ரம்ப் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

இது தொடர்பாக அமெரிக்காவின் பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர் பொப் உட்வர்ட் என்பவர் எழுதிய ‘ரேஜ்’ என்ற புத்தகம் செப்டம்பர் 15ஆம் திகதி வெளியாகிறது. அதில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தேர்தல் வரும் நேரத்தில் ட்ரம்ப் பற்றிய சர்ச்சைகளை இந்தப்புத்தகம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தப்புத்தகத்தின் சில பகுதிகள் த வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. ஆசிரியர் பாப் உட்வர்ட் என்பவரிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாக அந்தப் புத்தகத்தில், “வட கொரியா போன்ற நாடுகளின் சவால்களை முறியடிக்கும் வகையில், அணு ஆயுத அமைப்பை தான் உருவாக்கியுள்ளதாகவும், இதற்கு முன், அமெரிக்காவிடம் இல்லாத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் ஆகியோர் இதற்கு முன் கேள்விப்பட்டிராத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

பிறகு அமெரிக்காவிடம் இரகசிய புதிய அணு ஆயுதங்கள் இருப்பதாக ஆசிரியர் உட்வர்ட் பலரிடம் விசாரித்து உறுதி செய்தார். ஆனால் ட்ரம்ப் இதை எப்படி வெளியே தெரியப்படுத்தலாம் என்பதில் இந்தத் தகவல் அளித்தவர்கள் அதிர்ச்சியடைந்ததாக அவர் தன் நூலில் எழுதியுள்ளதாக வோஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் வியாழனன்று தான் இரகசிய தகவலை கசியவிடவில்லை என்று ட்ரம்ப் மறுத்தார்.

”நம்மிடம் பெரிய ஆயுத அமைப்புகள் உள்ளன, இல்லை நான் இரகசிய தகவல் பற்றி பேசவில்லை. நாம் கட்டமைத்ததைத்தான் கூறுகிறேன். நாம் பெரிய ஆயுத அமைப்பைக் கட்டமைத்துள்ளோம்” என்றார்.

நம் இராணுவம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது, கடந்த மூன்றரை ஆண்டுகளாக 2.5 ட்ரில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவத்துக்கு செலவு செய்துள்ளோம். இப்போது நம்மிடம் புதிய ரொக்கெட்டுகளும் ஏவுகணைகளும் உள்ளன. அதே போல் நாம் அதனை பயன்படுத்தும் சூழலை கடவுள் உருவாக்காமல் இருக்கட்டும், இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அணு ஆயுத அமைப்பு நம்மிடையே உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதாவது நம்மிடையே பெரிய ஆயுத, அணு ஆயுத அமைப்பு இருக்கிறது என்று மக்களுக்கு தெரிவித்தேனே தவிர நான் இரகசிய தகவல் எதையும் வெளியிடவில்லை என்ற ட்ரம்ப், “இதற்கு முன் கேள்விப்பட்டிராத அளவுக்கு நம்மிடையே இராணுவத் தளவாடங்கள், அணு ஆயுத அமைப்புகள் உள்ளன, சீன ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரிடம் இப்படிப்பட்டது இல்லை.

நான் இரகசியத் தகவலை வெளியிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. அவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள். நம் தொழில்நுட்பம் பற்றி அவர்கள் சரியாகப் பேச மாட்டார்கள். மக்களுக்குத் தெரியப்படுத்தினேன் அவ்வளவே.” என்றார் ட்ரம்ப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here