கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவன்; அவமானம் தாங்காமல் 2 மகன்களுடன், தீக்குளித்த மனைவி!

கல்லூரி மாணவியுடன் கணவர் ஓடியதால் அவமானம் தாங்காமல் 2 மகன்களை எரித்துக் கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயி. இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு அபிஷேக் (13), அபிரித்(9) ஆகிய 2 மகன்கள். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இளைய மகன் 4-ம் வகுப்பும் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் முத்துவுக்கும், அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதுடைய மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ராதா கணவரை கண்டித்துள்ளார். ஆனால், மாணவி மேல் உள்ள மோகத்தால் முத்து காதலை தொடர்ந்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவியுடன் முத்து ஊரைவிட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கல்லூரி மாணவியின் பெற்றோர் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அறந்தாங்கி போலீசார் முத்துவையும், மாணவியையும் தேடி வருகின்றனர். 2 மகன்களை வைத்துக்கொண்டு தனது கணவர் கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு ஓடியதால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த ராதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

தான் மட்டும் இறந்து விட்டால் மகன்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள ஆள் இருக்காது என்று எண்ணிய ராதா, அவர்களையும் கொன்று விட முடிவு செய்தார். பின்னர், பாசமாக வளர்த்த 2 மகன்களுக்கும் நேற்று முன்தினம் இரவு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். இதனை சாப்பிட்ட அவர்கள் அயர்ந்து தூங்கி விட்டனர். பின்னர் தனது மனதை கல்லாக்கி கொண்டு வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தூங்கி கொண்டு இருந்த மகன்கள் மீது ஊற்றி விட்டு தன் மீதும் ஊற்றிக் கொண்டு ராதா தீ வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு ராதாவும், அபிரித்தும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். அபிஷேக் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

பின்னர் அபிஷேக்கை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவியுடன் கணவர் ஓடியதால் அவமானம் தாங்காமல் தனது இரு மகன்களை எரித்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here