திருமணமாகாமல் பிறந்த குழந்தையை ஆட்களற்ற தியேட்டரில் எரித்துக் கொன்ற இளம்பெண்!

சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தையை எரித்துக் கொன்றது திருமணமாகாத பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பச்சிளம் ஆண் குழந்தை தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட குழந்தை, சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகள் சங்கரகோமதிக்கு (22) பிறந்தது என்பது தெரியவந்தது.

சங்கரகோமதி திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்ததால், அவமானமாக கருதிய குடும்பத்தினர், குழந்தையை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி பச்சிளம் குழந்தையை சங்கரகோமதி, அவருடைய தாயார் இந்திராணி (45) ஆகிய 2 பேரும் சேர்ந்து, அருகில் உள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு கொண்டு சென்று, தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சங்கரகோமதி, இந்திராணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சங்கரகோமதியின் காதலனான சங்கரன்கோவில் அருகே கண்டிகைபேரியைச் சேர்ந்த மாரிசாமி மகன் சங்கரையும் (22) போலீசார் கைது செய்தனர்.

கைதான சங்கரகோமதி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

என்னுடைய தந்தை சண்முகவேல் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நான் சங்கரன்கோவிலில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்தேன். அப்போது எனக்கும், கூலி தொழிலாளியான சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். இதில் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து சங்கரிடம் தெரிவித்தேன். அப்போது சங்கர், நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, என்னை திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார். பின்னர் சங்கர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதுகுறித்து என்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனை குடும்பத்தினர் அவமானமாக கருதியதால், வீட்டை காலி செய்து விட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்குபுரம் 6-வது தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்து வந்தோம்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு எனக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவமானம் அடைந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இதையடுத்து குழந்தையை கொலை செய்வதற்கு திட்டமிட்டோம்.

அதன்படி வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர், அதிகாலையில் பச்சிளம் குழந்தையை தூக்கி கொண்டு, தாயார் இந்திராணியுடன் அருகில் உள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு சென்றேன். அங்கு மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சங்கரகோமதி, இந்திராணி, சங்கர் ஆகிய 3 பேரையும் சங்கரன்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் சங்கரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இந்திராணியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

சங்கரகோமதிக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆவதால், அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here