யாழ் நகர தனியார் வைத்தியசாலை மனிதக்கழிவுகளும் தெல்லிப்பளையில் எரிக்கப்படுகிறதா?: யாழ் மாநகரசபை தீர்மானம்!

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான முறையில் மருத்துவ கழிவுகள் எரிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளமை பற்றி பல மாதங்களின் முன்னரே தமிழ்பக்கம் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், பொறுப்பான அதிகாரிகள் யாரும் அது பற்றி மூச்சும் விடாமல் இருக்கும் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் ஒரு அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் வைத்தியசாலைகளின் மனிதக் கழிவுகள் என்ன பொறிமுறையில் அகற்றப்படுகிறது என்பதை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்- ஒரு வார அவகாசத்தில்- யாழ் மாநகரசபைக்கு அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திடீரென இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு பின்னணி காரணமுள்ளது.

யாழில் ஆபத்தான முறையில் இயங்கும் மருத்துவ கழிவு எரிக்குமிடங்களில்- காதும் காதும் வைத்ததை போல- தனியார் வைத்தியசாலைகளின் கழிவுகளும் எரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்ததையடுத்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய தனியார் வைத்தியசாலைகளின் மனித கழிவுகள் முன்னர், பருத்தித்துறையிலுள்ள எரிக்குமிடத்தில் பணம் செலுத்தி எரிக்கப்பட்டது. எனினும், தற்போது அங்கு எரிக்கப்படுவதில்லை, யாழ்ப்பாணம்- தெல்லிப்பளையிலுள்ள மருத்துவ கழிவு எரிக்குமிடத்தில் அந்த கழிவுகளும் எரிக்கப்படுகிறது என சமூக செயற்பாட்டாளர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, யாழ் மாநகரசபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

யாழ் மாநகரசபையின் உறுப்பினர் வ.பார்த்தீபன் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார்.

தனது பகுதிக்குள் உள்ள வைத்தியசாலைகளின் மனிதக்கழிவுகள் என்ன பொறிமுறையில் அகற்றப்படுகிறது என்பதை யாழ் மாநகரசபை இதுவரை அறிந்திருக்கவில்லை.

தெல்லிப்பளை மனிதகழிவு எரிக்குமிடம்

தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையின் மனிதக்கழிவுகளை எரிப்ப வசதியாகவும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மனிதக்கழிவுகளை எரிக்கவும் வசதியாக தெல்லிப்பளை ஆதார வைத்திசாலை வளாகத்தில் மனிதக்கழிவு எரிக்குமிடம் அமைக்கப்பட்டது.

அப்போது வடக்கில் மூன்று மனிதக்கழிவு எரிக்குமிடங்கள் அமைக்கப்பட்டன. தெல்லிப்பளை, பருத்தித்துறை. கிளிநொச்சி என்பனவே அவை.

எனினும், தெல்லிப்பளை மனிதக்கழிவு எரிக்குமிடம் பொருத்தமற்றது என பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அது பற்றி பேசப்பட்டது. அப்போது, வடக்கு சுகாதாரசேவைகள் உயரதிகாரியொருர்- தெல்லிப்பளை நிலையத்தால் அயல் பிரதேச மக்களிற்கு அபாயமுள்ளது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

வலி வடக்கு பிரதேசசபையும் அந்த நிலையத்தை அகற்றும்படி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புற்றுநோயாளர்களின் மனிதக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் 1200- 1500 செல்சியஸ் வெப்பத்தை வெளியிடக் கூடியதாக இருக்க வேண்டும். எனினும், தெல்லிப்பளையில் உள்ளது 900 செல்சியஸ் வெப்பத்தையே வெளியிடக் கூடியது.

அத்துடன், தகனம் செய்யும்போது புகையை வெளியேற்ற 80 அடிக்கு குறையாத உயரமுடைய புகைபோக்கி அவசியம். ஆனால் தெல்லிப்பளையில் உள்ளது 40 வரையான அடி உயரமானது.

இதனால் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் சுற்றயல் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.

அத்துடன், தகனம் செய்யும் அறையின் கதவு மூடிய நிலையில்- புகை வெளியேறாத விதத்திலேயே தகனம் செய்ய வேண்டும். எனினும், கதவு திறந்த விதமாக தகனம் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

யாழில் உள்ள தனியார் வைத்தியசாலைகளின் கழிவுகள் இரவு நேரத்தில் அங்கு கொண்டு செல்லப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here