சட்டத்தரணி ஹிஜாஸின் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

இது குறித்தான வழக்கு இன்று (10) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் அஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஆராய்ந்த நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையிலான அதிகாரத்திற்கு அமைய, வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை விடுவிக்குமாறும் தெரிவித்து, அவரது சட்டத்தரணி கணேஷ்வரி முத்துசாமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிய வருவதாக தெரிவித்த, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு, பொலிசார் அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார்களாயின் சட்டமா அதிபர் ஒரு முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த கோரிக்கையை மீண்டும் விடுக்கும் தேவை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, விசாரணைகளை நிறைவு செய்து சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்று இறுதி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் ஒரு பெரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்துகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் விசாரணைக்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்களம் ஈடுபடுகிறது. மேலும், இந்த விடயத்தை பரிசீலிக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்டமா அதிபர் கருதுகிறார். விசாரணைகள் விரைவாக முடிவுக்கு வரும். இந்த கோரிக்கை தொடர்பான அடிப்படை எதிர்ப்பு இன்று எடுத்துக்கொள்ளப்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் சுதர்ஷண டி சில்வா தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதவான், இந்த வழக்கில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஒரு சந்தேகநபராக பெயரிடப்படவில்லை. எனவே, இந்த நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஒரு சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ அல்லது அவரை விடுவிக்கவோ பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதவான் கூறினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மிணி கிரிஹாகமவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here