சீமான் கட்சிக்குள் குழப்பம்: முக்கிய நிர்வாகி வெளியேற்றம்!

கடந்த வாரம் ஜூனியர் விகடனில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது.

அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணசுந்தரத்தை பற்றி தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர் விலகியதாக பதிவிட்டு வந்தார். அதுகுறித்து கல்யாணசுந்தரம் கேட்டபோது அவர் கட்சியில் இருந்து விலகவில்லை. இது பொய்யான தகவல் என விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் செத்தால்தான் நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைக்க முடியும் என ஆவேசமாக பேசியிருந்தார்.

இதனிடையே சீமானின் இடத்தைப் பிடிக்க பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஆசைப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி கட்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் தற்போது கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அண்ணா வணக்கம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியில் தொடர முடியாத நிலையிலிருப்பதால், இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கிறேன்!!

இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடும், உதவிகரமாகவும் பயணித்த அனைத்து உறவுகள் பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும், தங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிப்பதோடு, எதிர்கால உங்கள் பயணம் பெரு வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here