ஐரோப்பியாவின் மிகப்பெரிய அகதி முகாமில் அவலம்: உணவின்றி வீதியில் தூங்கும் ஆயிரக்கணக்கான அகதிகள்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். இருப்பிடம் இல்லாமல் அகதிகள் தெருவோரங்களிலும், வயல் நிலங்களிலும் நேற்றைய இரவை கழித்தனர்.

கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, முகாமில் தீ ஏற்பட்டது. இதனால் முகாமின் பெரும்பகுதியை தீ அழித்தது. மக்கள் உயிரை காத்துக்கொள்ள முகாமைவிட்டு தப்பியோடினர். பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

நேற்று புதன் கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு, எஞ்சிய குடியிருப்புக்களையும் அழித்தது.

இதனால் 13,000 அகதிகள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். எனினும், இந்த தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் முகாமின் பரந்த பகுதிகளும், அருகிலுள்ள தளமும் தீயில் அழிந்தன.

2015ஆம் ஆண்டு முதல் மோரியா முகாம் புலம்பெயர்ந்தோரின் வருகையால் நிரம்பியுள்ளது. 3,000 பேருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த முகாம், 2016ஆம் ஆண்டில் ஐரோப்பா அகதிகளின் பாதைகளைத் தடுக்கத் தொடங்கிய பின்னர் சில நேரங்களில் 20,000க்கும் அதிகமானோரை தாங்கியுள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் மோரியா முகாம் குடியிருப்பாளர்களில் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த முகாம் பூட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மோரியா முகாம் குடியிருப்பாளர்களால் இந்த தீ வைக்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

முகாமில் 407 ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் தீவில் அவசரகால நிலையை அறிவித்தார். அத்துடன் இத்தீ சம்பவத்திற்கு காரணமாக கலவரக்காரர்களைக் கண்டித்தார்.

இந்த முகாமில் சில இலங்கைத் தமிழர்களும் தங்கியுள்ளனர்.

கைக்குழந்தைகளுடன் அகதிக் குடும்பங்கள் நேற்று புதன்கிழமை இரவு திறந்த வெளியில் கழித்தனர். சிலர் தண்ணீர் மற்றும் பிற பொருட்களுக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்ல முயற்சித்தனர்.

அகதிகள் தீவின் முக்கிய நகரமான மைட்டிலீனை அடைவதைத் தடுக்க பொலிஸ் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அகதிகள் வயல்வெளிகளிலும் வீதியோரங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள பலர் உணவின்றி இருப்பதாக சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன. உணவு, படுக்கை இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள், அங்கு செல்லும் செய்தியாளர்களிடம் குழந்தைகள் உணவு கேட்டு கெஞ்சுகிறார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெஸ்போஸ் தீவில் நான்கு மாத அவசரநிலையை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் கலகப் பிரிவு பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தங்குமிடம் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று குடியேற்ற அமைச்சகம் கூறியது, ஆனால் இவை உள்ளூர் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மோரியாவை ஒரு மூடிய மையத்துடன் மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்கனவே முரண்பாடுகள் ஏற்பட்டது. அந்த மையம் நிரந்தரமாகி விடும் என உள்ளூர்வாசிகள் கருதுவதால், அதை எதிர்க்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here