நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென இறந்தது எப்படி?

திறமையான நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்த வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் 42 வயது வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள்.

இன்று மறைந்த வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவாக இருந்தது குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் திடீரென அவர் மறைந்தது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்தபோது வடிவேல் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்கிற சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே உடல்நலக்குறைவுடன் இருந்ததாக நடிகர் ராமர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here