இலங்கை அன்பளித்த தேயிலையினால் லெபனானில் சர்ச்சை: தேயிலை கள்ளனாகிய ஜனாதிபதி!

லெபனான் துறைமுக வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை அன்பளிப்பு செய்த தேயிலை, அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை அனுப்பிய தேயிலையை, அந்த நாட்டு ஜனாதிபதியின் பாதுகாவல் பிரிவு மற்றும் அவர்களின் குடும்பங்களிற்கு விநியோகித்ததால் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் மீது அந்த நாட்டு சமூக ஊடகவாசிகள் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். லெபனான் ஆட்சியாளர்கள் மீது கட்டுக்கடங்காத ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரமும் அங்கு பேசுபொருளாகியுள்ளது.

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் வெடித்து சிதறியதில் 190 பேர் வரையில் உயிரிழந்தனர். சுமார் 300,000 இலட்சம் குடும்பங்கள் வீடிழந்தனர்.

இந்த மாபெரும் அனர்த்தத்தையடுத்து, உலகின் பல நாடுகள் தம்மால் இயன்ற உதவியை அந்த நாடுகளிற்கு வழங்கின. இலங்கையும் தேயிலையை அன்பளித்தது.

ஓகஸ்ட் 24 ம் திகதி லெபனான் ஜனாதிபதி அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. இலங்கைத்தூதர் சிலோன் ரீயை, ஜனாதிபதியிடம் கையளிக்கும் புகைப்படத்துடன், பெய்ரூட் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,675 கிலோ (3,685 பவுண்ட்ஸ்) சிலோன் ரீயை நன்கொடையாக அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்கொடைக்கு என்ன ஆனது என்று லெபனான் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கேட்டபின், நேற்று முன்தினம் செவ்வாயன்று இரண்டாவது அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது.

சிலோன் ரீயை இராணுவத்திற்கு பரிசளித்தமை, மற்றும் அதை ராணுவ வீரர்களின் குடும்பங்களிற்கு விநியோகித்தமைக்கு இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும்படி, இலங்கையிலுள்ள லெபனான் தூதரை ஜனாதிபதி மைக்கல் அவுன் கேட்டுள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு லெபனான் வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். “தேயிலை திருடன்” மற்றும் “சிலோன் தேநீர்” என்ற ஹாஷ்டேக்குகள் ருவிற்றரில் பிரபலமாகி வருகிறது.

“சிலோன் ரீ லெபனானியர்களுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பாக குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது. நிச்சயமாக இது தேவையில்லாதவர்களுக்கு அனுப்பப்பட்ட பரிசு அல்ல. உங்கள் பரிவாரங்களுக்கு உதவி விநியோகிப்பது வெட்கக்கேடானது” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவுலா யாகூபியன் ருவிற்றரில் குறிப்பிட்டார். அவர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, பதவியை துறந்தவர்.

மற்றொரு பயனர் “இது ஜனாதிபதிக்கு பரிசாக இருந்தது என்பது பாவத்தை விட மோசமானது.”

தேயிலை சர்ச்சையைத் தவிர, ஓகஸ்ட் நடுப்பகுதியில் மவுரித்தேனியா அனுப்பிய 12 தொன் மீன்களிற்கு என்ன நடந்தது என்பது சமூக ஊடகவாசிகளின் முக்கிய கேள்வியாக இருந்தது.

இது தொடர்பான சர்ச்சை தீவிரமானதை தொடர்ந்து, கடந்த திங்கட் கிழமை இராணுவம் வெளியிட்ட தகவலில், அந்த மீன்களை பெற்று, பாதுகாப்பு தாராதரங்களின்படி சேமித்து வைத்திருப்பதாகவும், தேவையானவர்களிற்கு வழங்குவது குறித்து நிவாரண நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லெபனான் அரச நிர்வாகத்தின் ஊழல், நிவாரணப் பொருட்களையும் மிச்சம் விட்டு வைக்காதது அந்த நாட்டு மக்களிடம் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here